2014-10-20 16:02:31

கர்தினால் பரோலின் : மத்தியக்கிழக்குப் பகுதியின் நிலைகுறித்த உலக சமுதாயத்தின் பொறுப்புணர்வு


அக்.20,2014. மத்தியக்கிழக்குப்பிரச்சனைகள் குறித்து ஆராய திருத்தந்தை, இத்திங்களன்று கூட்டிய கர்தினால்கள் அவைக்கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அப்பகுதி கிறிஸ்தவர்களின் இன்றைய நிலைகள் குறித்தும் அனைத்துலக சமூகத்தின் பொறுப்புணர்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மத்தியக்கிழக்குப் பகுதியில் மத அடிப்படைவாதிகள், மற்றவர்களின் உரிமைகளை புறக்கணித்து கொலைகளிலும், தலைத்துண்டிப்புகளிலும், பெண் விற்பனைகளிலும், குழந்தைகளைப் போரில் ஈடுபடுத்துவதிலும், வழிபாட்டுத்தலங்களை அழிப்பதிலும் ஈடுபட்டுவருவதாக கவலையை வெளியிட்ட திருப்பீடச்செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், சிரியா மற்றும் ஈராக்கின் இன்றைய நிலைகளைச் சுட்டிக்காட்டி, இவை மத்தியக்கிழக்குப் பகுதிக்கு மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்றார்.
மத்தியக்கிழக்குப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டிய திருப்பீடச்செயலர், இத்தகையச் சூழல்களில் திருஅவை மௌனம் காக்கவோ, பாராமுகமாய் இருக்கவோ முடியாது என்றும், செபத்திற்கும் ஒப்புரவை நோக்கிய பேச்சுவார்த்தைக்கும் ஊக்கமளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
மத்தியக்கிழக்குப் பகுதியின் இன்றையத் துன்ப சூழல்கள் குறித்து அனைத்துலச் சமூதாயம் தொடர்ந்து மௌனம் காக்க முடியாது என்பதையும் வலியுறுத்திக்கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.