2014-10-20 15:59:05

அருளாளர் ஜோசப் வாஸ் புனிதராக அறிவிப்பு : 2015, சனவரி 14


அக்.20,2014. வருகிற சனவரி 14ம் தேதி அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களை, புனிதராக அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் வத்திக்கானில் நடந்த கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள், புனிதராக அறிவிக்கப்படும் தேதி தீர்மானிக்கப்பட்டது.
2015ம் ஆண்டு சனவரி 13ம் தேதி இலங்கையில் திருப்பயணத்தைத் தொடங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 14ம் தேதி காலையில் நிகழ்த்தும் திருப்பலியில் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களை, புனிதராக அறிவிக்கவுள்ளார்.
இந்தியாவின் கோவா மாநிலத்தில் Benaulimல் 1651ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி பிறந்த அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள், 1711ம் ஆண்டு சனவரி 16ம் தேதி கண்டியில் காலமானார். இலங்கையில் டச்சுக்காரர்களின் ஆக்ரமிப்பின்போது கால்வனிசக் கிறிஸ்தவம் அரசு மதமாக அறிவிக்கப்பட்டது. அதனால் கத்தோலிக்கர் கடுமையாய் நசுக்கி ஒடுக்கப்பட்டனர். அச்சமயத்தில் கத்தோலிக்கருக்கு உதவுவதற்காக இலங்கை சென்றார் அருளாளர் ஜோசப் வாஸ். இவர் இலங்கையில் கத்தோலிக்க விசுவாசத்தை நிலைநாட்டுவதற்குக் கடுமையாய் உழைத்தார். இவர் இலங்கையின் திருத்தூதர் எனவும் அழைக்கப்படுகிறார். 1995ம் ஆண்டு சனவரி 21ம் தேதி புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கொழும்புவில் அருள்பணி ஜோசப் வாஸ் அவர்களை அருளாளராக உயர்த்தினார். 2015ம் ஆண்டு சனவரி 14ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக அறிவிக்கப்படவுள்ளார் அருளாளர் ஜோசப் வாஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.