2014-10-18 13:29:18

புனிதரும் மனிதரே - விரல்களற்ற கரங்களுடன் திருப்பலி நிகழ்த்தியவர்


கனடாவில் Huron என்ற பழங்குடியினரிடையே 17ம் நூற்றாண்டில் பணி புரிந்த பல இயேசு சபை அருள்பணியாளர்களில் ஒருவர், Isaac Jogues. Huron மக்களின் பகைவர்களான Iroquois இனத்தவர், Isaac அவர்களையும் ஏனைய இயேசு சபைத் துறவிகளையும் சிறைபிடித்து அடிமைகளாக கொண்டு சென்றனர். அத்துறவிகள் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இச்சித்திரவதைகளின் காரணமாக, Isaac Jogues அவர்கள் தன் கை விரல்கள் பலவற்றை இழந்திருந்தார். இந்நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார். கைவிரல்கள் இல்லாததால், அவர் திருப்பலி செய்வதற்கு திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் Urban அவர்களிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இந்த அருள்பணியாளர் திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார்.
விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் தன் விரல்களற்ற கரங்களில் அவர் உயர்த்திப் பிடித்தது, அத்திருப்பலிகளில் கலந்துகொண்ட பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.
தன் மறைப்பணித் தளமான கனடா நாட்டுக்கு மீண்டும் திரும்பிய Isaac அவர்களை, Iroquois மக்கள் மீண்டும் சிறைபிடித்து சித்திரவதைகள் செய்தனர். 1646ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, அருள்பணி Isaac Jogues அவர்கள் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்த Iroquois இனத்தைச் சேர்ந்தவர், பின்னர் மனம் மாறி, Isaac என்ற பெயருடன் திருமுழுக்குப் பெற்றார். புனித Isaac Jogues மற்றும் ஏனைய கனடா நாட்டு மறைசாட்சிகளின் திருநாள், அக்டோபர் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.