2014-10-18 15:33:40

திருத்தந்தை மாணவர்களிடம் : அரைகுறை உண்மைகளில் திருப்தியடைந்து விடாதீர்கள்


அக்.18,2014. அரைகுறையான உண்மைகளுடனும் அல்லது உறுதியளிக்கும் மாயைகளுடனும் திருப்தியடைந்து விடாமல், மெய்மைகளை முழுமையாய்ப் புரிந்துகொள்ளும் பண்புகளில் வளருமாறு, இத்தாலிய பல்கலைக்கழக மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
FUCI என்ற இத்தாலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பினருக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, பல்கலைக்கழக வாழ்வின் முக்கிய அம்சங்கள் பற்றிக் குறிப்பிட்டு, உண்மைக்கானத் தணியாத தாகத்தில் மாணவர்களின் ஆய்வுகள் இருக்கவேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை ஆறாம் பவுல் பற்றிய தேசிய சிறப்புக் கருத்தரங்கை நடத்தவுள்ள FUCI கூட்டமைப்பினருக்கு அனுப்பியுள்ள செய்தியில், மக்கள் மத்தியில் இடம்பெறும் மோதல்களை வெற்றிகொண்டால் மட்டுமே, சந்திப்பு மற்றும் உடன்பிறந்தோர் உணர்வுக் கலாச்சாரத்தைப் பேணிக் காப்பதில் வெற்றியடைய முடியும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை.
கல்வியில் ஆர்வம், ஆய்வு, கலாச்சாரச் சந்திப்பு, உடன்பிறந்தோர் பண்பு ஆகியவை பற்றி இச்செய்தியில் விளக்கியுள்ளார் திருத்தந்தை.
இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1925ம் ஆண்டு முதல் 1933ம் ஆண்டுவரை FUCI கூட்டமைப்புக்கு முக்கிய உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.