திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் அருளாளராக உயர்த்தப்படும் திருப்பலியில் திருத்தந்தை
16ம் பெனடிக்ட்
அக்.18,2014. இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இறையடியார் திருத்தந்தை
ஆறாம் பவுல் அவர்கள் அருளாளராக உயர்த்தப்படும் திருப்பலியில் முன்னாள் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் அவர்கள் கலந்துகொள்வார் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது. இஞ்ஞாயிறு காலை
10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும்
திருப்பலியில் இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்படவுள்ளார். Giovanni
Battista Montini என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1954ல் மிலான்
உயர்மறைமாவட்ட பேராயராக நியமிக்கப்பட்டார். 1963ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டுவரை திருஅவையின்
தலைமைப் பொறுப்பை வகித்த இவர், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி காஸ்தெல் கந்தோல்ஃபோவில்
காலமானார். வட இத்தாலியின் பிரேஷா மாவட்டத்தில் 1897ம் ஆண்டில் பிறந்த திருத்தந்தை ஆறாம்
பவுல் அவர்கள் 1920ல் குருவானார். 1963ம் ஆண்டில் புனித திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள்
இறந்த பின்னர் பாப்பிறையான திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை
மீண்டும் கூட்டி அதனை நிறைவு செய்தார். இவர், இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட
முதல் திருத்தந்தையாவார்.