2014-10-17 15:49:42

திருத்தந்தை : இறைவனின் விண்ணக வாக்குறுதி


அக்.17,2014. கிறிஸ்தவத் தனித்துவத்தின் "முத்திரையாகிய" தூய ஆவியாரின் செயல்களுக்கு கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும், தூய ஆவியார் வழியாகவே இறைவன் நமக்கு விண்ணகத்தை வாக்குறுதி செய்துள்ளார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயினும், வெளிவேடத்தால் மின்னும் போலியான ஒளியில் வாழ்வதைக் கிறிஸ்தவர்கள் தேர்ந்தெடுப்பதால், ஒளியின் முத்திரையாகிய தூய ஆவியாரைத் தவிர்க்கின்றனர் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை.
இவ்வெள்ளி காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவி எனும் கொடையால் இறைவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்ல, நமக்கொரு வாழ்வுமுறையையும் தந்துள்ளார், இது நமது தனித்துவமாகவும் அமைந்துள்ளது என்று கூறினார்.
மீட்பளிக்கும் நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் முத்திரையிடப்பட்டுள்ளீர்கள் என்று பவுலடிகளார் எபேசு கிறிஸ்தவர்களிடம் கூறும் இந்நாளைய முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவர்களின் தனித்துவமே இந்த முத்திரைதான், நாம் எல்லாரும் திருமுழுக்கில் பெற்றுள்ள தூய ஆவியாரின் இந்த வல்லமைதான் நமது தனித்துவம் என்றுரைத்த திருத்தந்தை, தூய ஆவியார் நம் இதயங்களில் முத்திரையிடப்பட்டுள்ளார், இவர் நம்மோடு உடன் நடக்கிறார் என்றும் கூறினார்.
அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய தூய ஆவியாரின் கனிகளே விண்ணகத்திற்கான நம் பாதை, இந்த நம் பாதையில் விண்ணகம் தொடங்குகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.