2014-10-17 15:50:04

ஆயர்கள் மாமன்றம் : திருமணத்தின் அழகு, குடும்பம் பற்றியப் போதனைகளுக்கு முக்கியத்துவம்


அக்.17,2014. நற்செய்தி அறிவிப்பிலும், விசுவாசத்தைப் பிறருக்கு வழங்குவதிலும் குடும்பங்கள் முக்கியமான பங்கைக் கொண்டிருக்கின்றன என்று, குடும்பம் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தந்தையர் கூறினர்.
கடந்த திங்கள்கிழமையிலிருந்து மொழிவாரியாக, பத்து சிறு குழுக்களாகப் பிரிந்து கருத்துப் பரிமாற்றம் செய்த பின்னர், இவ்வியாழன் காலையில் நடந்த 12வது பொது அமர்வில் அக்குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகளின் சுருக்கம் பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் நடந்த இப்பொது அமர்வில் 178 மாமன்றத்தந்தையர் பங்கெடுத்தனர்.
குடும்பங்களுக்கு ஆதரவான கொள்கைகளின் முக்கியத்துவம், குடும்பங்களில் வயதானவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியம், கடும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஆதரவு போன்றவை இச்சிறு குழுக்களில் பேசப்பட்டன.
விபசாரம், பெண்களின் உறுப்புகள் முடமாக்கப்படுதல், பாலியல் மற்றும் பிற தொழில்களில் சிறார் பயன்படுத்தப்படல் போன்ற விவகாரங்களுக்கு எதிரான கண்டனத்தையும் இக்குழுக்கள் வெளியிட்டன.
மேலும், பிரச்சனைகளை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உதவிகள் அவசியம் என்பதை வலியுறுத்திய இக்குழுக்கள், திருமணம் என்பது, கடவுளிடமிருந்து பெறும் ஒரு கொடை என்பதற்கு அழுத்தம் கொடுத்து, திருமணம் குறித்த விசுவாசக் கோட்பாடுகள் தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளன.
திருமணத்தின் கிறிஸ்தவக் கண்ணோட்டத்தின் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், திருஅவையின் கருணைப் பண்பின் அணுகுமுறையானது, தனது மக்களை பாவத்திலிருந்து மனந்திரும்பி வாருங்கள் என்று திருஅவை தனது மக்களை அழைக்கவேண்டிய கடமையை விஞ்சிச்செல்வதாய் இருக்கக்கூடாது என்றும் இச்சிறு குழுக்கள் பரிந்துரைத்துள்ளன.
2015ம் ஆண்டில் நடைபெறவுள்ள குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான தயாரிப்பு ஏடாகவே இந்தச் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத் தொகுப்பு அமையும் என்பதையும் இச்சிறு குழுக்களின் 35 பக்க அறிக்கை கூறியுள்ளது.
இம்மாதம் 5ம் தேதி தொடங்கிய இந்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம், வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.