2014-10-16 15:57:42

திருத்தந்தை பிரான்சிஸ் - இறைவனைப் போற்றும் செபங்கள் சிறிது கடினமானவை


அக்.16,2014. நமது தேவைகளுக்காக மன்றாடுவதும், தேவைகள் நிறைவேறும்போது நன்றி கூறுவதும் எளிதான செபங்கள், ஆனால், இறைவனைப் போற்றும் செபங்கள் சிறிது கடினமானவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றியத் திருப்பலியில், புனித பவுல் அடியார் எபேசியருக்கு எழுதியத் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட விவிலியப் பகுதியை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.
உலகம் தோன்றுவதற்கு முன்பே இறைவன் நம்மைத் தேர்ந்தெடுத்தார் என்று பவுல் அடியார் கூறுவதைப் புரிந்துகொள்வது கடினம் என்றுரைத்தத் திருத்தந்தை, ஆயினும் இது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வழங்கப்பட்டுள்ள மறையுண்மை என்று வலியுறுத்தினார்.
ஒரு தாயின் கருவில் உருவாகும் குழந்தையைப் போல, நாம் ஒவ்வொருவரும் இறைவன் உள்ளத்தில் இடம் பெற்றுள்ளோம் என்றும், இந்த மறையுண்மை நமது கட்டுப்பாட்டில் இல்லாத உண்மை என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய மாபெரும் மறையுண்மையை உணர்ந்தால், இறைவனைப் போற்றும் செபம் நமக்கு மகிழ்வைத் தரும் செபமாக மாறும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.