2014-10-15 16:43:54

ஹாங்காங் சனநாயக ஆதரவாளர்களுக்கு ஆலயங்கள் திறந்துவிடப்பட்டுள்ளன


அக்.15,2014. ஹாங்காங்கில் சனநாயக ஆதரவு போராட்டதாரர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை ஆலயங்களைத் திறந்துவிட்டுள்ளதாக, ஹாங்காங் கத்தோலிக்க வார இதழான Sunday Examiner ஆசிரியர் அருள்பணி Jim Mulroney கூறினார்.
வாடகைக்கார் ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள் என, இப்போராட்டங்களில் சலிப்படைந்துள்ள மக்கள், சனநாயக ஆதரவுப் போராட்டதாரர்கள்மீது தாக்குதல்களை நடத்துகின்றனர் என்று வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார் அருள்பணி Jim Mulroney.
எனினும், ஹாங்காங் கத்தோலிக்கத் திருஅவை இப்போராட்டதாரர்களுக்கு மேய்ப்புப்பணி அளவில் ஆதரவு கொடுத்து வருகின்றது என்றுரைத்த அக்குரு, போராட்டங்கள் இடம்பெறும் இடங்களுக்கு அருகிலுள்ள ஆலய வளாகங்களை இவர்களுக்குத் திறந்துவிட்டு இவர்கள் இரவில் தூங்கவும், செபிக்கவும், இன்னும்பிற அத்தியாவசிய வசதிகளுக்கும் உதவி செய்து வருவதாகதச் தெரிவித்தார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் சனநாயக ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினர்க்கும் இடையே இப்புதன் இரவில் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து 45 போராட்டதாரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள்மீது மிளகுத்தூள் தூவப்பட்டதால் இவர்கள் தாங்கள் போராடும் முக்கிய இடத்தைவிட்டு வேறிடம் சென்றுள்ளனர் என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.