2014-10-15 16:42:49

வேதிய, அணுஆயுதங்கள் விரைவில் ஒழிக்கப்பட திருத்தந்தை அழைப்பு


அக்.15,2014. வேதிய ஆயுதங்கள் ஒழிப்பு நடவடிக்கைகளில் கடந்த ஆண்டில் முன்னேற்றம் காணப்பட்டாலும், உலகில் குளோரின் வாயு உட்பட வேதிய ஆயுதங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்து வெளிவரும் தகவல்கள், இந்த ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட வேண்டுமென்பதை உலக சமுதாயத்துக்கு நினைவுபடுத்துகின்றன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அணுஆயுத ஒழிப்பு, பெண்களின் முன்னேற்றம் ஆகிய இரு தலைப்புக்களில் நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள் இவ்வாறு கூறினார்.
வேதிய மற்றும் அணுஆயுதங்கள் ஒழிக்கப்படவும், போரிடும் குழுக்கள் ஆயுதங்களைக் களையவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விடுத்துவரும் அழைப்பை ஐ.நா. அமர்வுகளில் குறிப்பிட்டுப் பேசினார் பேராயர் Auza.
அணுஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் அவற்றைக் குறைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் திறனற்று உள்ளவேளை, இந்நாடுகள் இந்த ஆயுதங்களை நவீனப்படுத்தவும், சேமிப்புக்களை அதிகரிக்கவும் முயற்சிப்பது கவலை தருகின்றது என்றும் தெரிவித்தார் பேராயர் Auza.
அணுஆயுதங்கள் ஏற்படுத்தும் மனிதப் பேரழிவுகள் குறித்து வருகிற டிசம்பரில் வியன்னாவில் நடைபெறவுள்ள கருத்தரங்கு பற்றியும் குறிப்பிட்டார் பேராயர் Auza.
மேலும், பெண்களின் முன்னேற்றம் பற்றிய பேச்சுகள் உலகெங்கும் இடம்பெற்றாலும், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகள் இன்றும் உள்ளன, அவர்கள் அநியாயமாய்க் கைது செய்யப்படுகின்றனர், குடியேற்றப் பெண்களும், புலம்பெயர்ந்த பெண்களும் துன்புறுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் Auza.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.