2014-10-15 14:39:28

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


அக்.15,2014. இப்புதனன்று உரோம் நகரின் இதமான வெயில் மக்கள் ஒன்று கூடுவதற்கு உதவுவதாக இருக்க, தூய பேதுரு வளாகத்தில் திருப்பயணிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்றைய நம் மறைக்கல்விப் போதனையில் கிறிஸ்தவ நம்பிக்கையின் இலக்கு, அதாவது, காலம் நிறைவுறும் வேளையில் கிறிஸ்துவின் வருகையில் இறைவனின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும் என்பது குறித்து நோக்குவோம் என தன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணிசெய்து கொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது' என்ற புதிய யெருசலேம் உருவகத்தைக் கொண்டு இறைவனுக்கும் அவர் மக்களுக்கும் இடையேயான மகிழ்வுநிறை சந்திப்பைப் பற்றி எடுத்துரைக்கிறார் புனித யோவான், திருவெளிப்பாடு நூல் 21ம் பிரிவில். இந்த மணமகள், மணமகன் குறித்த உருவகம் ஓர் ஆழமான உண்மையைத் தன்னுள் கொண்டுள்ளது. அதாவது, நம்மைப் போன்று மனித உடல் எடுத்ததன் மூலம், இயேசு தன்னை மனித குலத்தோடு இணைத்துக்கொண்டார். அதேவேளை, அவரின் இறுதி வருகையின்போது வானகத்தில் இடம்பெறும் திருமண விருந்தில், இந்த மறைபொருளான திருமணத்தின் முழுநிறைவைக் காணலாம். புதிய யெருசலேம் குறித்த இந்தக் காட்சி, அனைத்து மக்களும் இணக்கவாழ்விலும் தெய்வீக அமைதியிலும் ஒன்றித்து வாழ, இறைவன் திட்டத்தின்படி ஒரு நகரே திருஅவை என்பதைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. ஆகவே, கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, இறைவருகையையும், மனிதகுல குடும்பத்திற்கான மீட்புத்திட்டத்தின் நிறைவையும் மகிழ்வுடன் எதிர்நோக்கியிருப்பதாகும். அனைத்துத் தலைமுறைகளிலும் திருஅவையானது, இந்த நம்பிக்கை விளக்கை உலகின் முன்னால் தூக்கிப் பிடிக்கிறது. விசுவாசத்தின் எண்ணையால் ஏற்றப்பட்டுள்ள இந்த விளக்கை நாம் தூக்கிப் பிடித்துள்ளோமா? கடவுளின் வாக்குறுதிகள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மகிழ்வுநிறை மற்றும் நம்பத்தகும் சாட்சிகளாக நாம் வாழ்கிறோமா? என்ற கேள்விகளை இன்று நாம் நம்மிடமே கேட்போம்.
இவ்வாறு தன் புதன் மறையுரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.