2014-10-15 16:44:15

இரு கொரிய நாடுகளின் இராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு


அக்.15,2014. ஏழு ஆண்டுகள் மௌனம் சாதித்த பின்னர், இரு கொரிய நாடுகளின் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் இப்புதனன்று பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளனர்.
எல்லைக் கடல் பகுதியில் இடம்பெறும் மோதல்கள் தொடர்பாக, வட மற்றும் தென் கொரிய நாடுகளின் இராணுவ உயரதிகாரிகள், இவ்விரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள Panmunjom கிராமத்தில் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
தென் கொரியாவில் இயங்கும் சில குழுவினர்களால் எச்சரிக்கை செய்தி அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்ட பலூன்கள் அண்மையில் வட கொரியாவுக்கு அனுப்பி விடப்பட்டிருந்தன. இந்தப் பலூன்களை, வட கொரிய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியிருந்தனர். இரு நாடுகளுக்கு இடையில் உள்ள கடற்பகுதியில் அண்மைக் காலமாக மீண்டும் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி மாதம் இடம்பெறவிருந்தபோதிலும் சில காரணங்களால் அது தள்ளிப்போடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளில் இரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்ததை அடுத்து இப்புதனன்று இராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.