2014-10-15 13:46:20

அமைதி ஆர்வலர்கள் : நொபெல் அமைதி விருது 1957( Lester Bowles Pearson)


அக்.15,2014. 1957ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதுக்கு உரியவர் லெஸ்டர் பவ்லெஸ் பியர்சன்(Lester Bowles Pearson). இவர், கானடா நாட்டு வரலாற்றில் தூதரகப்பணிக்குப் பெருமை சேர்த்தவர், மனித உரிமைகள் பாதுகாப்பு, அணுஆயுதக் களைவு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் போன்ற விவகாரங்களில் கானடா நாட்டின் ஈடுபாட்டிற்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்தவர்... இப்படிப்பட்ட சாதனைகளின் புகழுக்கு உரியவர் பியர்சன். கானடாவின் 14வது பிரதமராக 1963ம் ஆண்டு ஏப்ரல் 22 முதல் 1968ம் ஆண்டு ஏப்ரல் 20 வரை பதவியில் இருந்த இவர், 1956ல் சூயஸ் கால்வாய் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்ப்பதற்காக உழைத்தவர். அதுவே இவருக்கு 1957ல் நொபெல் அமைதி விருதையும் பெற்றுக் கொடுத்தது. பேராசிரியர், வரலாற்றியல் நிபுணர், அரசு ஊழியர், படைவீரர், அரசியல்வாதி எனப் பன்முகங்களைக் கொண்டிருந்தவர் பியர்சன். 1897ம் ஆண்டு ஏப்ரல் 23 முதல் 1972ம் ஆண்டுவரை நாற்பது ஆண்டுகாலத் தூதரகப் பணிகளுக்கும், அரசியல் பணிகளுக்கும் உலகினரின் பாராட்டைப் பெற்றவர். இரண்டாம் உலகப்போரில் விமானப்படையில் பயிற்சியாளராக இருந்தவர், பியர்சன் அவர்களை “Mike” என்ற புனைப்பெயருடன் அழைத்தார்.
கானாடாவின் டொரோன்ட்டோவில் அயர்லாந்து நாட்டைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர் லெஸ்டர் பவ்லெஸ் பியர்சன். அவரது தந்தை மெத்தோடியிஸ்ட் கிறிஸ்தவ சபையில் போதகராகப் பணிசெய்தார். இவரது தந்தை பழமைவாதியாகவும், தாய் முற்போக்காளராகவும் இருந்ததால் பியர்சன், அரசியலில் ஒரு சரிசமநிலையைக் கற்றுக் கொண்டார். பியர்சன், தனது 16வது வயதில் 1913ம் ஆண்டில் டொரோன்ட்டோ விக்டோரியா கல்லூரியில் பெயரைப் பதிவு செய்தார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டில் கானடா முதல் உலகப்போரில் சேருவதாக அறிவித்தது. எனவே, விக்டோரியா பல்கலைக்கழகம் எடுத்து நடத்திய மருத்துவமனையில் சேவை செய்வதற்கு முன்வந்தார் பியர்சன். இங்கிலாந்திலும், எகிப்திலும், கிரீசிலும் ஈராண்டுகள் பணியாற்றிய பின்னர், ராயல் விமானப்படை அமைப்பில் சேர்ந்தார். ஆயினும் இப்பணியின்போது இருமுறை விபத்துக்கு உள்ளாகி காயமடைந்ததால், சேவைக்குத் தகுதியற்றவர் என்று சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அதனால் உலகப்போர் முழுவதும் பயிற்சியாளராகவே இவர் இருந்தார். அதேநேரம் பல்கலைக்கழகத்தில் படிப்பையும் தொடர்ந்தார். 1919ல் பட்டம் பெற்று ஈராண்டுகள் மாமிசம் பதப்படுத்தும் நிறுவனத்தில் வேலை செய்தார் பியர்சன்.
பின்னர் மீண்டும் படிப்பைத் தொடரவந்த பியர்சனுக்கு, ஈராண்டுகளுக்குக் கல்வி உதவிப்பணம் கிடைத்தது. அதை வைத்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெயரைப் பதிவு செய்தார். அவர் தேர்ந்தெடுத்துப் படித்த வரலாற்றியியலில் மட்டுமல்லாமல், விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். 1925ம் ஆண்டில் டொரோன்ட்டோ பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றியியலில் முதுகைலப் பட்டம் பெற்று பேராசிரியராகச் சேர்ந்தார். அச்சமயத்தில் கால்பந்து குழு மற்றும் பனி ஹாக்கி விளையாட்டுக் குழுவுக்கும் தலைவராக இருந்தார். 1925ல் திருமணம் முடித்து இரு பிள்ளைகளுக்குத் தந்தையானார் பியர்சன். 1927ல், கானடாவின் வெளியுறவுத்துறை நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், 1928ல், கல்வித்துறையைவிட்டு கானாடாவின் வெளியுறவு விவகாரங்களில் முதல் செயலராகக் கிடைத்த வேலையை ஏற்றார். 1935ம் ஆண்டுவரை இப்பதவியில் இருந்த பியர்சன், 1931ல் கோதுமை கொள்முதல் குழுவுக்குச் செயலரானார். 1934,35ம் ஆண்டுகளில் இவர் வியாபாரப் பொருள்களின் விலை நிர்ணயக் குழுவின் செயலரானார். இதே பதவி, இவருக்கு, அனைத்துலக தூதரகம் குறித்த பயிற்சிநிலைப் பொறுப்பைப் பெற்றுக் கொடுத்தது. ஹாக் நகரில் நடந்த அனைத்துலகச் சட்டம் பற்றிய கூட்டம்(1930), இலண்டன் கப்பற்படைக் கூட்டம்(1930), ஜெனீவாவில் நடந்த அனைத்துலக ஆயுதக்களைவு மாநாடு(1933-1934), இலண்டன் கப்பற்படை கருத்தரங்கு(1935), ஐக்கிய நாடுகள் அமைப்பின் கருத்தரங்குகள்(1935) போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய திறமைகள் இவரை இந்தப் பயிற்சிநிலை பதவிக்குக் கொண்டு சேர்த்தது. 1939 முதல் 1942 வரை 2ம் உலகப் போரின்போது கானடாவின் இராணுவப் பணிகளுக்கும் அகதிகள் பிரச்சனைகள் தீர்க்கப்படவும் உதவி செய்தார் பியர்சன்.
பியர்சன், தனது சிறந்த திறமைகளினால் விரைவாகப் பொறுப்புக்களில் முன்னோக்கிச் சென்றார். 1935 முதல் 1941 வரை இலண்டனில் கானடாவின் தூதரகத்தில் பணியாற்றினார். 1941ல், ஒட்டாவா மாநிலத்தில் வெளியுறவுத்துறையில் உதவி நேரடிப் பொதுச் செயலராகவும், 1942ல் வாஷிங்டனில் கானடாவின் தூதரகத்திலும் பணியில் சேர்ந்த இவர், 1945 சனவரியில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் கானடாவின் அரசியல் தூதரானார். இப்பணிக் காலத்தில், 1943ல் ஐ.நா.வின் நிவாரண மற்றும் மறுவாழ்வு நிர்வாகம்(UNRRA), இன்னும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்(FAO1943-1945) உருவாக்கப்பட்டதில் பங்கேற்ற இவர், ஐ.நா.நிறுவனம் அமைக்கப்படுவது குறித்த தொடக்க விவாதங்களிலும்,(1944); ஐ.நா.நிறுவனம் உருவாக்கப்படுவது குறித்த சான் பிரான்செஸ்கோ கருத்தரங்கிலும்(1945) கலந்துகொண்டார். 1949ல் கையெழுத்திடப்பட்ட வட அட்லாண்டிக் உடன்படிக்கை(NATO) உருவாக்கப்படுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய உரையை பிரதமர் St. Laurentக்கு எழுதிக்கொடுத்தவர் பியர்சன். NATO அமைப்புக்கு 1957ம் ஆண்டுவரை கானடாவின் பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் இவரே.
1945ல் ஐ.நா.நிறுவனத்தின் முதல் பொதுச் செயலராக ஆகவேண்டிய பியர்சன் அவர்களின் பதவி இரஷ்யாவின் எதிர்ப்பினால் தடை செய்யப்பட்டது. கானடா நாட்டு பிரதமர் வில்லியம் மக்கென்சி கிங் இவரை தனது அரசில் சேர்க்க முயற்சித்தார். ஆனால் கிங் அவர்களின் அரசியல் போக்கு பிடிக்காததால் பியர்சன் மறுத்துவிட்டார். ஆயினும் கானடாவின் பிரதமர் பதவியிலிருந்து கிங் ஓய்வுபெறுவதாக அறிவித்த பின்னர் பியர்சன் அரசியலில் நுழைந்தார். 1947ல் இஸ்ரேல் நாடு உருவாகுவதற்கு இவர் முக்கியமான வேலைகளைச் செய்தார். 1956ம் ஆண்டின் சூயஸ் கால்வாய்ப் பிரச்சனையில், பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகியவை எகிப்திய நிலப்பகுதியை ஆக்ரமித்தன. அப்போது பியர்சன், ஐ.நா.வின் அவசரகால இராணுவ அமைப்பை உருவாக்கி, அங்கு நிறுத்தியதன் மூலம் குறைந்த அளவிலான உயிர்ச்சேதங்களுடன் நாடுகள் தங்களின் ஆக்ரமிப்பை அகற்றச் செய்தார். எனவே ஐ.நா. வழியாக சூயஸ் கால்வாய்ப் பிரச்சனைக்கு லெஸ்டர் பவ்லெஸ் பியர்சன் தீர்வு கண்டதைப் பாராட்டி 1957ல் இவருக்கு நொபெல் அமைதி விருது அளிக்கப்பட்டது. இவர் உலகை அழிவினின்று காப்பாற்றினார் என்று நொபெல் விருதுக் குழு இவரைப் பாராட்டியது. குண்டுவீச்சுக்கள் இல்லாத ஓர் உலகை, ஒருவர் ஒருவரை மதித்து மாண்புடன் திகழும் ஓர் உலகை உருவாக்குவோம். நாம் வாழும் இடங்களில் வன்முறை ஒழிய நாம் எடுக்கும் முயற்சிகள் என்ன?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.