2014-10-15 13:54:04

அக்.16,2014. புனிதரும் மனிதரே : புனிதரான எதிர்த் திருத்தந்தை(St. Hippolytus)


உரோம் அருகேயுள்ள ஒரு மறைமாவட்டத்தின் ஆயராக இருந்துகொண்டே திருத்தந்தையின் போதனைகளைத் தவறென சுட்டிக்காட்டி, தன்னையே திருத்தந்தையாக அறிவித்துச் செயல்பட்ட ஓர் ஆயர், புனிதராக முடியுமா என்று கேட்டால் முடியாது என்றுதான் நாம் பதில் கூறுவோம். ஆனால் அப்படி ஒருவர் புனிதர் ஆகியிருக்கிறார் என்றால் அவர்தான் ஹிப்போலிட்டஸ். திருத்தந்தை கலிஸ்துசின் சில கொள்கைகளை இவர் எதிர்த்தார். இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது, மூவொரு கடவுள் கொள்கையில் இறைமகன் குறித்தும் தந்தையாம் இறைவன் குறித்தும் திருத்தந்தை கலிஸ்துசும் எதிர்த் திருத்தந்தை ஹிப்போலிட்டசும் முரண்பாட்டுக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இரண்டாவதாக, பரத்தைமைத்தொழிலில் ஈடுபட்டோரையும் மன்னிக்க முன்வந்த திருத்தந்தை கலிஸ்துசின் செயல்பாடு ஹிப்போலிட்டசால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக இருந்தது. எதிர்த் திருத்தந்தை மிகப்பெரும் அறிவாளி, மிகவும் புகழ்பெற்ற இறையியலாளர், சட்டங்களை நுணுக்கமாகக் கடைப்பிடிப்பவர் மற்றும் கண்டிப்பானவர். திருஅவை வரலாற்றில் ஒரு திருத்தந்தைக்கு எதிராக முதன்முதலாக எதிர்த் திருத்தந்தையாக செயல்பட்டவர் இவரே. இவர் கிரேக்கத்தைச் சேர்ந்தவர். ஏறத்தாழ 170ம் ஆண்டு பிறந்த இவர், உரோம் நகரின் பிரபல இறையியல் கல்லூரியின் தலைவராகவும், உரோம் அருகேயுள்ள மறைமாவட்டமொன்றின் ஆயராகவும் பணியாற்றினார். இயேசு அன்பு கூர்ந்த புனித யோவானின் மாணவராகிய போலிக்கார்ப்பின் மாணவர்களுள் ஒருவரான இரேனியசின் மாணவர்தான் இந்த ஹிப்போலிட்டஸ். இவர் திருத்தந்தையுடன் மோதல் போக்கைக் கொண்டிருந்தாரேயொழிய இவருடைய போதனைகள் திருஅவைக்கு எதிரானவை என்று கூறப்பட்டதில்லை. கிரேக்க மொழியில் நிறைய எழுதியுள்ளார். திருத்தந்தை கலிஸ்துசின் மரணத்திற்குப்பின் பதவியேற்ற திருத்தந்தை போன்டியனுடனும் இவர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை. கிறிஸ்தவர்களுக்கு எதிரான போக்கு வலுத்தபோது, இவரும் திருத்தந்தை போன்டியனும் கைதுசெய்யப்பட்டு சர்தீனியா தீவின் சுரங்கங்களில் வேலை செய்ய அனுப்பப்பட்டனர். இது மரண தண்டனைக்கு ஒப்பானதாகும். இந்த நேரத்தில் இன்னொரு திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழிவகுக்கும்பொருட்டு திருத்தந்தை போன்டியன் தன் பதவியைத் துறந்தார். திருத்தந்தை போன்டியனுடன் ஒப்புரவை மேற்கொண்ட ஹிப்போலிட்டஸ், திருஅவையுடன் சமாதானமாகி, திருத்தந்தை அந்தேருசுடன் ஒப்புரவானார். இறையியலில் புலமை வாய்ந்தவராக இருந்த ஹிப்போலிட்டஸ், சர்தீனியா தீவில் திருத்தந்தை போன்டியனுடன் 235ம் ஆண்டு மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார். இவ்விருவரின் உடலையும் உரோம் நகருக்குக் கொணர்ந்து அடக்கம் செய்ய உதவினார் திருத்தந்தை ஃபாபியன். திருத்தந்தை கலிஸ்துசும் புனிதர், அவரை எதிர்த்து எதிர்த் திருத்தந்தையாகச் செயல்பட்ட ஹிப்போலிட்டசும் புனிதர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.