2014-10-14 15:36:53

விவிலியத் தேடல் – வயலில் தோன்றிய களைகள் உவமை


அக்.14,2014. தொடர்ந்து இரண்டாவது வாரமாக விவிலியத் தேடல் நம்மை வயல்வெளிக்கு அழைத்து வந்துள்ளது. சென்ற வாரம் விதைப்பவர் உவமையைக் கேட்டோம். இயேசு கூறிய அந்த விதைப்பவர் தாராள மனதுடன், காடு மேடு என்ற பாகுபாடுகள் பாராமல் விதைகளை அள்ளித் தெளித்தார் என்று சிந்தித்தோம். அவர் விதைத்தெல்லாம் நல்ல விதைகள். அவை விழுந்த இடம், விதைகளின் வளர்ச்சியை அல்லது வீழ்ச்சியைத் தீர்மானம் செய்தது. இந்த வாரம் இயேசு இருவரை விதைப்பவர்களாக குறிப்பிடுகிறார்.
மத்தேயு 13: 24-25
இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்.” என்று இயேசு தன் உவமையைத் துவக்குகிறார்.
இந்த வரிகளை வாசித்தபோது, எனக்குள் எழுந்த முதல் கேள்விகள் இவை: வயலில் பொதுவாக களைகள் தானே வளர்வதில்லையா? களைகளையும் ஒருவர் விதைக்க வேண்டுமா? என்ற கேள்விகள் மனதில் அலைமோதின. இந்த உவமையின் இரண்டாம் பகுதியை வாசித்தபோது, என் கேள்விகளுக்கு ஒரு வகையான தெளிவு கிடைத்தது.
மத்தேயு நற்செய்தி 13: 26-30
பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, “ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இது பகைவனுடைய வேலை” என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், “நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்’ என்று கூறுவேன்” என்றார்.
அதாவது, நிலத்தில் தானே விளையும் களைகள், பயிர்களிலிருந்து, தானியக் கதிர்களிலிருந்து வெகுவாக வேறுபட்டிருக்கும். எனவே, வளரும்போதே அவற்றை அடையாளம் கண்டு நீக்குவது எளிது. ஆனால், இந்த உவமையில் சொல்லப்பட்டுள்ள களைகளோ, தானியக் கதிர்களைப் போலவே தோற்றமளித்தன. தானியக் கதிர்கள் போலவே தோற்றமளிக்கும் களைகளை யாராவது வேண்டுமென்றே அந்த நிலத்தில் விதைக்க வேண்டியிருக்கும். எனவேதான், களைகளைப் பற்றி பணியாளர்கள் சொன்னதும், நில உரிமையாளர், இது பகைவனின் வேலை என்பதை உடனே உணர்கிறார். அந்தப் பகைவன், பகலில் விதைக்கப் பயந்து, இரவில் விதைத்துச் சென்றான் என்பதையும் இயேசு குறிப்பிடுகிறார்.
கூடவே இருந்து குழி பறித்தல், பக்கத்தில் இருந்து கழுத்தறுத்தல் என்ற சொற்றொடர்களை நாம் பயன்படுத்துகிறோம். இவ்வுலகில் தானாகவே விளையும் தீமைகள் போதாதென்று, ஒரு சிலர் திட்டமிட்டு தீமைகளை விதைத்து, அவை வளர்வதைக் கண்டு இரசிக்கும் நிலையை நாம் அறிவோம்.
ஒரு சில கணணி நிறுவனங்களில் பணிபுரிந்தோர், அந்த நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டபோது, அந்த கணணிகளில் அல்லது அந்த நிறுவனம் உருவாக்கிய கணணி மென்பொருள்களில் 'virus' எனப்படும் அழிவு 'programme'களை நுழைத்துச் சென்றனர் என்பதை நாம் அறிவோம். அதேபோல், ஒரு நிறுவனத்தை எழுப்புவது ஒரு கலை என்றால், அதை அழிப்பதற்கும் திட்டமிடும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் பலர் அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்பது துயரம் தரும் மற்றோர் உண்மை.
கதிர்களைப் போலவே களைகளும் இருப்பது குழப்பத்தை உருவாக்குவதுபோல, நம் வாழ்விலும் நல்லவை போலத் தோற்றமளிக்கும் பல தீமைகள் நமக்குள் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிடுகின்றன என்பதையும் இந்த உவமை நமக்கு நினைவுறுத்துகிறது.
அதேபோல், மேலோட்டமாக அவசரமாகப் அடுத்தவரைப் பார்க்கும்போது, அதுவும் முற்சார்பு எண்ணங்களுடன் பார்க்கும்போது, அவர்களில் பலர் களைகளைப் போலத் தோற்றமளிக்க வாய்ப்புண்டு. அந்த அவசர முடிவுகளால் அவர்கள் அப்படித்தான் என்று முத்திரை குத்துவதும் ஆபத்து என்பதையும் இந்த உவமை நமக்கு சொல்லித் தருகிறது.
தோற்றத்தை வைத்து, கதிர்களையும், களைகளையும் தீர்மானிக்கக் கூடாது என்பதை பின்வரும் கதை விளக்குகிறது. உல்லாசக் கப்பலில் பயணம் செய்தார் ஓர் ஆயர். மற்றொருவருடன் ஒரே அறையில் தங்கவேண்டிய சூழல் அவருக்கு உருவானது. எனவே, உறங்கச் செல்வதற்கு முன், ஆயர் தன்னிடமிருந்த பொன் சங்கிலி, விலையுயர்ந்த தங்கக் கைக்கடிகாரம் இரண்டையும் கப்பல் மேற்பார்வையாளர் அறைக்கு எடுத்துச்சென்றார். மேற்பார்வையாளரிடம் ஆயர், "என் அறையில் தங்கியிருப்பவர் மீது எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. எனவே, இந்தப் பொருள்களை நீங்கள் பத்திரமாகப் பூட்டி வைத்திருங்கள். நாளைக் காலையில் பெற்றுக் கொள்கிறேன்" என்று கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர் சிரித்தார். அவரது சிரிப்புக்கு ஆயர் காரணம் கேட்டபோது, மேற்பார்வையாளர் ஆயரிடம், "ஆயர் அவர்களே, உங்கள் அறையில் தங்கியுள்ள நண்பர் அரை மணி நேரத்திற்கு முன் இங்குவந்து, தன் சங்கிலி, கைக்கடிகாரம் இரண்டையும் என்னிடம் ஒப்படைத்தபோது, அவரும் நீங்கள் சொன்னதையே சொன்னார்" என்று கூறினார்.
களைகள் என்று அவசர முடிவெடுத்தால், கதிர்கள் வளர்வதற்கு வாய்ப்பளிக்காமல் செய்துவிடும் ஆபத்தும் உள்ளது. 1770ம் ஆண்டு, ஒரு நாள். இத்தாலியின் ஓர் ஊரில் நற்கருணை ஆசீர் வழிபாட்டுக்கு சிறுவர்கள் இருவர் பீடச்சிறார் உடையணிந்து தயாராக வந்தனர். ஒரு சிறுவன் Annibale (Della Ganga). மற்றொரு சிறுவன், Francesco (Castiglioni). சம்மனசுகள் போல உடையணிந்து வந்த இரு சிறுவர்களும் தண்டின் மேல் பொருத்தப்பட்ட மெழுகு திரிகளை, ஏந்தி வந்தனர். திடீரென அவர்களுக்குள் ஒரு பிரச்சனை எழுந்தது. யார் குருவின் வலதுபக்கம் நிற்பது என்ற பிரச்சனை. பிரச்சனை வலுத்து, இறுதியில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் நிலை உருவானது. சிறுவன் Francesco தன் கையிலிருந்த மெழுகு தாண்டினால் Annibale தலையில் அடிக்க, இரத்தம் வெளிவந்தது. கோவிலுக்கு வந்திருந்த மக்கள் சண்டையைப் பார்த்து, அவ்விரு சிறுவர்களையும் கோவிலை விட்டு துரத்திவிடுமாறு கத்தினர். அங்கிருந்த குருவும் அச்சிறுவர்களை கோவிலுக்கு வெளியே அனுப்பிவிட்டு வந்தார்..
இது நடந்து, 55 ஆண்டுகள் உருண்டோடின. 1825ம் ஆண்டு. ஒவ்வொரு 25 ஆண்டுகளுக்கும் ஒரு முறை கத்தோலிக்கத் திருஅவை, ஜுபிலி ஆண்டை அறிவித்து, கொண்டாடுவது வழக்கம். ஜுபிலி ஆண்டைத் துவக்கும் நிகழ்வாக, மூடியிருக்கும் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயக் கதவில், அந்த ஆண்டு திருத்தந்தையாக இருப்பவர், சுத்தியல் கொண்டு மும்முறை தட்டுவார். கதவு திறக்கும். ஜுபிலி ஆண்டு துவக்கப்படும்.
1825ம் ஆண்டு, திருஅவை ஜுபிலி ஆண்டைக் கொண்டாடியபோது, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது திருத்தந்தையாக இருந்த 12ம் லியோ அவர்களும், கர்தினால் Castiglioni அவர்களும் பசிலிக்கா கதவருகே சென்றனர். கர்தினால் கையில் சுத்தியல் இருந்தது. அதைப் பெறுவதற்கு முன், திருத்தந்தை 12ம் லியோ அவர்கள் புன்முறுவலுடன் கர்தினால் Castiglioniயிடம், " சுத்தியலைக் கொண்டு என் தலையில் அடித்துவிட மாட்டீர்களே?" என்று சொன்னார். கர்தினாலும் சிரித்தபடியே சுத்தியலைத் திருத்தந்தையிடம் கொடுத்தார்.
ஆம், 55 ஆண்டுகளுக்கு முன், பீடச் சிறுவர்களாய் சண்டையிட்ட இருவரில், சிறுவன் Annibale திருத்தந்தை 12ம் லியோவாக திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். அவருடன் இருந்த கர்தினால் Castiglioni தான் அன்று சிறுவன் Annibaleலின் தலையில் அடித்த சிறுவன் Francesco. திருத்தந்தை 12ம் லியோ அவர்களின் மரணத்திற்குப் பின், கர்தினால் Castiglioni அவர்கள், 8ம் பயஸ் என்ற பெயருடன், திருஅவையின் தலைவரானார்.
1770ம் ஆண்டு சண்டையிட்ட பீடச் சிறுவர்களை கோவிலைவிட்டு துரத்தவேண்டும் என்று கூறிய மக்கள், தொடர்ந்து அவர்களை களைகள் என்று ஒதுக்கியிருந்தால், திருஅவை இரு நல்ல திருத்தந்தையரை இழந்திருக்கும்.
நாம் ஒவ்வொருவரும் கதிர்கள், களைகள் என்று இரண்டையும் நமக்குள் வளர்ப்பவர்கள். சில நேரங்களில் நம்மிடம் உள்ள கதிர்கள் பயன்தரும் வகையில் வெளிப்படும். வேறு சில வேளைகளில் நமது களைகள், நமது குறைகள் அளவுக்கு மீறி வளர்ந்து, நம்மையும், பிறரையும் சங்கடப்படுத்தும். கதிர்களை வளர்ப்பதும், களைகளை வளர்ப்பதும் நமக்குத் தரப்பட்டுள்ள சுதந்திரம்.
Cherokee என்ற அமெரிக்கப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன் பேரனுக்கு வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தந்தார். "எனக்குள் இரு ஓநாய்கள் உள்ளன. ஒரு ஓநாய் மிகவும் நல்லது. சாந்தம், பொறுமை, கருணை, அமைதி என்ற நல்ல குணங்கள் கொண்டது. மற்றொரு ஓநாய் பொல்லாதது. கோபம், ஆணவம், பொய்மை என்ற பல எதிர்மறை குணங்கள் கொண்டது. இவ்விரு ஓநாய்களும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே உள்ளன. இதே சண்டை உனக்குள்ளும் நடக்கிறது. உலக மக்கள் அனைவருக்குள்ளும் நடக்கிறது" என்று முதியவர் சொன்னார்.
சிறிது நேர சிந்தனைக்குப் பின், பேரன் தாத்தாவிடம், "இந்தச் சண்டையில் எந்த ஓநாய் வெல்லும்?" என்று கேட்டான். அதற்கு தாத்தா பேரனிடம், "நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவளிக்கிறாயோ, அதுதான் வெல்லும்" என்றார்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் நல்லவை, தீயவை இணைந்து வளர்கின்றன. முழுமையான வளர்ச்சி அடைந்தபின்னரே அவற்றின் பண்புகள் வெளிப்படும். நாம் எந்த ஓநாயை ஊட்டி வளர்க்கிறோமோ அந்த ஓநாயே வெற்றிபெறும்.
1993ம் ஆண்டு வெளியான “Schindler's List” என்ற திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். அக்கதையின் நாயகன் Oskar Schindler, நன்மை, தீமை இரண்டும் கலந்த மனிதர். போலந்து நாட்டின் Krakow நகரில் பெரும் செல்வராய் இருந்த Schindler அவர்கள், மது, மங்கை என்று தன் வாழ்வைச் செலவிட்டவர். அவர் நடத்தி வந்த தொழிற்சாலையில் யூதர்களை மிகக் குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தி, பெரும் இலாபம் திரட்டிவந்தார்.
ஆனால், நாத்சி படையினரின் கொடுமைகள் அவரது மனசாட்சியைத் தட்டியெழுப்பின. தன்னுடையத் தொழிற்சாலையில் பணியாற்றிய அத்தனை யூதர்களையும் நாத்சி கொடுமைகளிலிருந்து பல வழிகளில் காப்பாற்றினார். அவரால், குறைந்தது ஆயிரம் யூதர்களாவது காப்பாற்றப்பட்டனர் என்பது வரலாறு.
தன்னலம், தன் சுகம் என்ற களைகளை அதிகம் வளர்த்து வாழ்ந்துவந்த Schindler அவர்கள், இறுதியில் 1000க்கும் அதிகமான யூதர்களைக் காத்ததன் வழியாக, தன் உள்ளத்தில் நல்ல பயிர்களை வளர்த்து, நன்மைகளை அறுவடை செய்தார் என்பதை உணர்கிறோம்.
நாம் கதிர்களை கருத்துடன் வளர்த்தால், களைகள் கருகிப் போகும். நாம் களைகளை வளர்ப்பதில் கருத்தைச் செலவிட்டால், கதிர்கள் காணாமற்போகும். நாம் கதிர்களை வளர்க்கிறோமா? களைகளை வளர்க்கிறோமா? கடவுளுக்கு முன் பதில் சொல்வோம்.








All the contents on this site are copyrighted ©.