2014-10-13 15:13:21

வாரம் ஓர் அலசல் – புரட்சி கனல்கள்


அக்.13,2014 RealAudioMP3 . அன்பு நெஞ்சங்களே, தம்பி ஆபேலுக்கு எதிரான அண்ணன் காயின் செய்த முதல் கிளர்ச்சி தொடங்கி, உலக வரலாற்றில் பல்வேறு புரட்சிகள் நடைபெற்றுள்ளன, இந்தப் புரட்சிகள், மக்களின் கலாச்சாரம், பொருளாதாரம், சமூக-அரசியல் ஆகியவற்றில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ஒரு திருப்பம்" எனப் பொருள்படும் புரட்சி என்ற சொல்லின் பலனை, 18ம் நூற்றாண்டு ப்ரெஞ்சுப் புரட்சி தெளிவாகக் காட்டுகிறது. சனநாயகப் புரட்சி, தொழில் புரட்சி, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, பேராசைப் புரட்சி என்று புரட்சிகள் உலகில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரபு வசந்தம் என்ற பெயரில் அண்மையில் தொடங்கிய புரட்சிகள், வட ஆப்ரிக்கா தொடங்கி அண்மை கிழக்கு நாடுகளை அசைத்துப் பார்த்து வருகின்றன. சமயத் தீவிரவாதத்தின் அடிப்படையில் ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் இஸ்லாமிய நாட்டினர் தற்போது நடத்திவரும் வன்முறைக் கிளர்ச்சிகளுக்கு எதிராக, மிக சக்தி வாய்ந்த சமூக ஊடகப் புரட்சியும் தொடங்கப்பட்டுள்ளது. உலகின் முஸ்லிம்களே டுவிட்டரில்(#NotInMyName) தொடங்கியுள்ள இப்புரட்சி ஆரம்பிக்கப்பட்ட 7 நாட்களிலே 14 ஆயிரத்துக்கும் அதிகமான டுவீட்டுக்களைப் பெற்றுள்ளது. ப்ரெஞ்சுப் புரட்சி, பிரான்சிலும் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் பெரும் மாற்றங்களைக் கொணர்ந்திருந்தாலும் எண்ணற்ற மனித உயிர்களையும் அது பலிவாங்கியுள்ளது. அரபு வசந்தத்திலும் இதேநிலைதான். இப்புரட்சிகளுக்கு வயதுவந்தவர்கள் முதல்புள்ளி வைத்தனர். ஆனால் ஓரிரு ஆண்டுகளாக, ஒரு சிறுமி, புரட்சியில் ஈடுபட்டு உலகினர் அனைவரின் ஒட்டுமொத்த கவனத்தையும் கவர்ந்து வருகிறார்.
நான் மலாலா, நானும் மலாலாதான் என்னும் குரலுடன் நம்மையெல்லாம் வியப்பின் உச்சத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருப்பவர்தான் இச்சிறுமி. 17 வயதான பாகிஸ்தானிய சிறுமி மலாலா யூசுப்சாய், இந்தியாவின் பிரபல சிறார்நல சமூக ஆர்வலரான 60 வயது கைலாஷ் சத்யார்த்தியுடன் 2014-ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்துகொண்டுள் RealAudioMP3 ளார். 17 வயதில் நொபெல் விருது பெற்றிருப்பதன் மூலம், மிகக் குறைந்த வயதில் இவ்விருதைப் பெற்றவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் மலாலா. கடந்த வெள்ளியன்று அறிவிக்கப்பட்ட இவ்விருது பற்றி பிர்மிங்காமில் ஊடகங்களிடம் பேசிய மலாலா...
RealAudioMP3 முதல் பாகிஸ்தானியராக, முதல் இளம் பெண்ணாக, முதல் இளம் மனிதராக, அமைதிக்கான நொபெல் விருதைப் பெற்றது குறித்து நான் பெருமை அடைகிறேன். எனது தந்தை என் கைகளைக் கட்டாமல், சுதந்திரப் பறவையாக வாழ அனுமதித்தார். ஒவ்வொரு சிறுமியும் பள்ளிக்குச் செல்வதை நான் பார்க்க வேண்டும். இன்றும் உலகில் 5 கோடியே 70 இலட்சம் சிறுமிகள் பள்ளிக்குச் செல்லவில்லை. பெண்கல்வி உரிமைக்கான எனது போராட்டம் தொடரும். என்னை பொறுத்தவரையில் ஒவ்வொரு சிறுமியும் கல்வி கற்பதற்கு உரிமை பெற வேண்டும். எனக்கு கிடைத்த நொபெல் விருது பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதாக அமையும் என நம்புகிறேன். இவ்விருது எனது போராட்டத்தைத் தொடர்வதற்கான ஓர் ஊக்கமாகக் கருதுகிறேன். உலகிலுள்ள எல்லாச் சிறாரும் தங்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டும், வேறு யாருக்காகவும் காத்திருக்கக் கூடாது. இந்த நொபெல் விருது மூலம் இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தையைத் துவக்க வேண்டும் என இரு நாட்டுப் பிரதமர்களையும் கேட்டுக்கொள்கிறேன். நான் இன்னும் வெற்றி பெறவில்லை. நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. எனது வேலை இன்னும் தொடக்கத்தில் தான் உள்ளது....
என்று மலாலா கூறினார். இந்த 17 வயதுச் சிறுமி மலாலா, பாகிஸ்தானின் முதல் அமைதி விருது, உலக அமைதி மற்றும் செழிப்பு அறக்கட்டளையின், "துணிச்சல் விருது" (bravery award), இன்னும் பல விருதுகளையும் ஏற்கனவே பெற்றிருப்பவர். 2013ம் ஆண்டு ஜூலை 12ம் தேதியன்று மலாலா தனது 16வது பிறந்த நாளைச் சிறப்பித்தார். அந்நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் பேசிய மலாலா, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கட்டாயக் கல்வி பெறுவதற்கு இருக்கும் உரிமைக்கான தனது போராட்டம் பற்றி எடுத்துச் சொன்னார். நான் எனக்காக இங்கு பேசவில்லை, அடிப்படை உரிமைகளை இழந்து வாழும் அனைவரும் அமைதியில் வாழ்வதற்காகப் பேசுகிறேன் என்று கூறினார RealAudioMP3 ். இவரது உரையை உலகின் அனைத்துத் தலைவர்களும் வியந்து கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த நாளை, ஐக்கிய நாடுகள் நிறுவனம் "மலாலா தினம்" என்றும் அறிவித்தது.
பாகிஸ்தானின் சுவாத் மாவட்டத்தில் மலாலா வாழ்ந்த பகுதியில் தலிபான்கள் பெண்கள் பள்ளி செல்வதற்குத் தடை விதித்தனர். அதையும் மீறி மலாலா பள்ளி சென்றுவந்தார். இவர் தனது 11-வது வயதிலே பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுக்கத் தொடங்கினார். 2009ம் ஆண்டில் இவர் பி.பி.சியின் உருது வலைப்பதிவு வழியாக, தனது பகுதியில் தலிபான்களின் கட்டுப்பாடுகள் குறித்து விவரித்து வந்தார். இருப்பினும் புனைப்பெயரில் எழுதிவந்தமையால் இவரை அடையாளம் தெரியாதிருந்தது. ஆனால் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் இவர் நேரடியாகத் தோன்றியதிலிருந்து தலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். 2012ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி, மலாலா பள்ளிக்குப் பேருந்தில் சென்றபோது தலிபான்களால் சுடப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடினார். உலகம் துடித்தது; மக்கள் கொதித்தெழுந்தனர். மலாலா, இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்த மலாலா, இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் வாழ்ந்துகொண்டே மலாலா அறக்கட்டளை என்னும் ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் பாகிஸ்தான், நைஜீரியா, ஜோர்டன், சிரியா, கென்யா ஆகிய நாடுகளில் வாழும் சிறுமிகளின் கல்விக்காகச் சேவை செய்து வருகிறார்.
புரட்சிச் சிறுமி, புரட்சிக் கனல் மலாலா போன்று, பல துணிச்சல் சிறுமிகளின் வீரதீர சாதனைகளை அவ்வப்போது ஊடகங்கள் உலகுக்கு வெளிப்படுத்துகின்றன. தெற்கு ஜெர்மனியிலுள்ள பவேரியன் மலையிலிருந்து 6,500 அடி உயரத்திலிருந்து பாராசூட்டையொத்த paragliding கருவியில் குதித்து உலகிலேயே மிகவும் துணிச்சல் மிக்க சிறுமி என்ற பெயரை பெற்றுள்ளார் லூயிஸா புரோசார்ட்(Luisa Broschart)என்ற 3 வயது சிறுமி. இவர் தனது தந்தையின் மார்புடன் பெல்ட்டால் பிணைக்கப்பட்ட நிலையில் மலையிலிருந்து குதித்து இந்தச் சாதனையை படைத்துள்ளார். மேலும், பிரிட்டனில் பள்ளிக்குச் செல்லும் பத்து வயது Skye என்ற சிறுமி, நான்கு அடிக்குச் சற்று உயரமானவர். இந்தச் சிறுமி, இளம் வயதிலேயே இரட்டைக் குதிரையில் சவாரி செய்து அசத்தி வருகிறார். ஐரோப்பா முழுவதும் பயணம் செய்த இச்சிறுமி, இரண்டு பெரிய படங்களிலும் சண்டைக் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றி உள்ளார்.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் 13 வயதுச் சிறுமி ஒருவர் தனது தந்தையைக் காப்பாற்ற 5 இளைஞர்களுடன் எதிர்த்து நின்று போராடி அடித்து விரட்டியுள்ளார். மேலும், இந்தியாவின் சிப்சாகர் மாவட்டத்தில் உள்ள சிமாலுகுரி என்ற இடத்தில் குஞ்சன் சர்மா என்ற 14 வயதுச் சிறுமி, கடத்தல்காரர் ஒருவரிடம் தன்னைப் பிணையாக அர்ப்பணித்து, கடத்திச் செல்லப்பட்ட பத்துச் சிறுவர்களை விடுவித்துள்ளார். அவரது இந்த வீரச் செயல் இத்துடன் முடிந்து விடவில்லை. அஸ்ஸாம்-நாகலாந்து எல்லைப்பகுதியில் துப்பாக்கி வைத்திருந்த கடத்தல்காரனால் அடர்ந்த காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட அந்தச் சிறுமி அங்கிருந்து தப்பித்து, அருகிலிருந்த தேயிலைத் தோட்ட மக்களின் உதவியுடன் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
அன்பர்களே, சமுதாயங்களில் புரட்சிக்கனல் சிறுமிகள் இருந்தாலும், உலகில், ஏறக்குறைய நூறு கோடிச் சிறார் இன்றும் பாலினப் பாகுபாடுகளையும் வன்முறைகளையும் எதிர்கொள்கின்றனர். கடந்த சனிக்கிழமையன்று(அக்.11) கடைப்பிடிக்கப்பட்ட உலக சிறுமிகள் தினத்திற்கென ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள சிறார்கள், ஏனைய சகச் சிறார்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் நிகழ்வுகள் மிகவும் அதிகரித்திருப்பதாக அண்மை அறிக்கை ஒன்று கூறுகிறது. உலகில் 15க்கும் 19 வயதுக்கும் உட்பட்ட ஏழு கோடிச் சிறுமிகள், ஏதாவது ஒரு வகையில் உடலளவில் துன்புறுத்தப்படுகின்றனர். இவர்களில் எழுபது விழுக்காட்டினர் இத்துன்பங்களை வெளியிடுவதில்லை. இருபது வயதுக்குட்பட்ட 12 கோடிச் சிறுமிகள் கட்டாயமாக பாலியல் வன்செயலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். குடும்ப உறுப்பினர்கள், பள்ளித் தோழர்கள், ஆசிரியர்கள் போன்றோரால் வளர்இளம் சிறுமிகள், பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு ஐ.நா.வின் யூனிசெப் குழந்தை நல அமைப்பின் உதவி இயக்குனர் கீதா ராவ் கூறியுள்ளார். “வளர்இளம் சிறுமிகளை மேம்படுத்தல் : தொடர் வன்முறையை நிறுத்துதல்” என்ற தலைப்பில் இவ்வாண்டு உலக சிறுமிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
அன்பு நேயர்களே, மலாலா என்ற ஒரு சிறுமியின் புரட்சிக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை. சிறாரின் உரிமைகளுக்காகப் போராடிவரும் இவ்வாண்டின் நொபெல் அமைதி ஆர்வலர்களைப் பாராட்டிய பான் கி மூன் அவர்கள், இன்று உலகின் உண்மையான வெற்றியாளர்கள் சிறார்கள் என்று சொன்னார். மலாலா, நம்பிக்கையின் புதிய அடையாளமாக இருக்கிறார் என்று உலகம் போற்றுகிறது. அன்பர்களே, நமது குடும்பங்களில் வளரும் பெண் குழந்தைகளை மற்றொரு மலாலாக்களாக உருவாக்குவோம். துணிச்சல், மனஉறுதி, புதிய கண்ணோட்டம் இவற்றில் குழந்தைகளை வளர்ப்போம்.
சுவாமி விவேகானந்தர் சொல்கிறார் – இலட்சியத்தில் தீவிர நாட்டம் ஏற்பட்டுவிட்டால் மற்றவை எளிதில் வந்துவிடும். ஒருமுறை, இருமுறையல்ல, பல்லாயிரம் முறை சூழ்நிலையுடன் போராடி இறந்து, அப்போதும் துணிச்சலை இழக்காமல் ஆன்மா போராடுமானால் அது பேராற்றல் உள்ளதாக மாறிவிடுகிறது என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.