2014-10-11 15:59:55

மனநலம் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு நாடுகள் மரணதண்டனை, ஆம்னஸ்டி


அக்.11,2014. ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டில், மனநலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தொடர்ந்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு வருவது, பன்னாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் குறித்த விதிமுறைகள் மீறப்படுவதைத் தெளிவாகக் காட்டுகின்றது என, பன்னாட்டு ஆம்னஸ்டி மனித உரிமைகள் கழகம் கூறியது.
அக்.10, இவ்வெள்ளியன்று இடம்பெற்ற உலக மரணதண்டனை எதிர்ப்பு நாளில் இவ்வாறு கூறிய ஆம்னஸ்டி கழகம், குற்ற விசாரணகளின்போது, பல நேரங்களில் மனநலம் பாதிப்பு கண்டுபிடிக்கப்படுவதில்லை எனவும் கூறியது.
ஜப்பானில் மரணதண்டனைக் கைதியாக இருக்கும் 78 வயது Hakamada Iwao அவர்கள் 1968ம் ஆண்டில் நியாயமற்ற விசாரணையை எதிர்கொண்டார். முன்னாள் குத்துச்சண்டை வீரரான Hakamada Iwao, உலகில் நீண்ட காலமாக மரணதண்டனை கைதியாக இருப்பவர் எனவும் ஆம்னஸ்டி கழகம் கூறியது.
மேலும், உலக மரணதண்டனை எதிர்ப்பு நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள், உலகில் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் மரணதண்டனை ஒரு கொடுமையான பழக்கம், இது மனித மாண்பைச் சீர்குலைக்கின்றது என்று கூறியுள்ளார்.
2012ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2013ம் ஆண்டில் உலகில் மரணதண்டனைகள் 12 விழுக்காடு அதிகரித்துள்ளது என ஐ.நா. கூறுகிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.