2014-10-11 14:33:55

அக்டோபர் 12, புனிதரும் மனிதரே – பெண் கல்வியால் புனிதம் அடைந்தவர் - புனித Rosa Venerini


1656ம் ஆண்டு, இத்தாலியின் Viterbo என்ற பகுதியில் பிறந்த Rosa, தன் வாழ்வை செபத்திலும், தவத்திலும் கழிப்பதற்காக, 20வது வயதில், தொமினிக்கன் துறவுச் சபையில் சேர்ந்தார். அவர் துறவு மடத்தில் சேர்ந்த அடுத்த ஆண்டே அவரது தந்தை இறந்ததால், விதவையான தன் தாய்க்குத் துணையாக இருப்பதற்கு, Rosa, துறவு வாழ்வைவிட்டு வெளியேறினார். தன் சொந்த ஊருக்கு வந்த அவர், இறைவனுக்குத் தொடர்ந்து பணியாற்ற விரும்பி, அவ்வூரில் இருந்த சிறுமிகள், பெண்கள் ஆகியோருக்கு மறைகல்வி சொல்லித் தர ஆரம்பித்தார்.
Rosaவின் இந்த முயற்சி, அப்பகுதியில் இருந்த அருள் பணியாளர்களைக் கோபமடையச் செய்தது. மறைகல்வியை வழங்கும் தகுதி தங்களுக்கு மட்டுமே உள்ளதென்றும், ஒரு சாதாரண பெண் அதைச் செய்யமுடியாதென்றும் அவர்கள் நினைத்தனர். ஆனால், காலம் செல்லச் செல்ல, Rosaவிடம் மறைகல்வி பயின்ற பெண்களிடம் உருவான நல்ல மாற்றங்களைக் கண்ட அருள் பணியாளர்கள் தங்கள் தவற்றை உணர்ந்தனர்.
Rosa அவர்கள், மறைகல்வியுடன், அப்பெண்களின் வாழ்வுக்குத் தேவையான கல்வி அறிவையும், இன்னும் பல திறமைகளையும் கற்றுத்தந்தார். பெண் கல்வி என்பது ஒரு புரட்சி என்ற எண்ணம் அக்காலத்தில், இத்தாலியில் பரவியிருந்ததால், இவர் துவக்கியப் பணிக்கு பல வழிகளில் எதிர்ப்புக்கள் இருந்தன. இவரும், இவருடன் இணைந்த பெண்களும் பலமுறை அம்புகளால் தாக்கப்பட்டனர். இவர்கள் நடத்தி வந்த பள்ளிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இருப்பினும், Rosa அவர்களும் அவருடன் இணைந்த பெண்களும் மனம் தளராமல் கல்விப் பணி புரிந்ததால், அப்பகுதி ஆயர் அவர்களை ஆதரித்து, மேலும் பல பள்ளிகளைத் துவக்க ஊக்குவித்தார்.
இறுதியில், Rosa அவர்கள், 1713ம் ஆண்டு, தன் 57வது வயதில், உரோம் நகர் அடைந்து, அங்கும் பள்ளிகள் துவங்கி, திருத்தந்தையின் ஆதரவையும் பெற்றார். "பக்தியுள்ள ஆசிரியர்கள்" (“Maestras Pias”) என்ற ஒர் அமைப்பை உருவாக்கி, பெண் கல்வியை வெகுவாக வளர்த்தார் Rosa. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, உரோம் நகரில் பெண்களுக்குக் கல்விப் பணியாற்றிய Rosa அவர்கள், 1728ம் ஆண்டு, மே மாதம் 7ம் தேதி, தன் 72வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவரை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2006ம் ஆண்டு புனிதராக உயர்த்தினார். புனித Rosa Venerini அவர்களின் திருநாள், மே மாதம் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.