2014-10-10 11:44:02

நொபெல் அமைதி விருது 2014 : மலாலா, கைலாய்ஷ் சத்யார்த்தி


அக்.10,2014. சிறார் உரிமைகள் ஆர்வலர்களான இந்தியாவின் கைலாய்ஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் ஆகிய இருவருக்கும் 2014ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்படுவதாக இவ்வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறாரும் இளையோரும் ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும், அனைத்துச் சிறாரும் கல்வி பெறுவதற்கான உரிமைக்கு ஆதரவாகவும் மலாலாவும், கைலாய்ஷும் உழைத்துவருவதைப் பாராட்டி இவ்விருவருக்கும் இவ்விருது வழங்கப்படுவதாக, நார்வே நொபெல் அமைதி விருதுக்குழு அறிவித்துள்ளது.
17 வயதான மலாலா, பள்ளிக்குச் செல்லும் சிறுமி. இவர், சிறுமிகளின் கல்விக்காகப் போராடி வந்ததை விரும்பாத தலிபான்கள், மலாலாவை 2012ம் ஆண்டில் தலையில் சுட்டனர். அதையும் விடுத்து சிறுமிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார் மலாலா. நொபெல் வரலாற்றில் மிக இளவயதில் இவ்விருதைப் பெறுகிறார் மலாலா யூசுப்சாய் என்று நொபெல் விருதுக்குழு கூறியுள்ளது.
இந்தியரான அறுபது வயதாகும் Satyarthi, மகாத்மா காந்தியின் மரபுகளைக் காத்து வருபவர் மற்றும் நிதி ஆதாயத்துக்காக சிறார் கடுமையாய்ப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து பல்வேறு வகைகளில் அமைதியான போராட்டங்களைத் தலைமைதாங்கி நடத்தி வருபவர் என்று அக்குழு கூறியுள்ளது.
ஓர் இந்துவும், ஒரு முஸ்லிமும், ஓர் இந்தியரும் ஒரு பாகிஸ்தானியரும் கல்விக்கு ஆதரவாகவும், பயங்கரவாதத்தை எதிர்த்தும் போராடுவதில் இணைகின்றனர் என்றும் நொபெல் குழு கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.