2014-10-10 16:11:50

திருத்தந்தை : ஆன்மப் பரிசோதனை நம்மைச் சாத்தானிடமிருந்து பாதுகாக்கும்


அக்.10,2014. தீமை நம் இதயங்களில் நுழைந்துவிடாமல் தடுப்பதற்கு ஒரு தொன்மையான, ஆனால் மிகவும் நல்ல பழக்கம் ஒன்று உள்ளது, அதுவே மனச்சாட்சியைப் பரிசோதனை செய்வதாகும் என்று இவ்வெள்ளிக்கிழமையன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சாத்தான் எப்போதும் நம்மிடம் திரும்பி வரும், மனிதரைச் சோதிப்பதை அது ஒருபோதும் நிறுத்தாது, சாத்தான் பொறுமையுள்ளது என்பதை, இந்நாளைய நற்செய்தி வாசகம் (லூக்.11,15-26) நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் விட்டுவந்த வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும் சாத்தான், மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அங்கே குடியிருப்பது பற்றிக் கூறும் இவ்வெள்ளி தின நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, சாத்தான் தனக்கென விரும்பும் நம் ஆன்மாக்களைவிட்டு அது ஒருபோதும் விலகுவதில்லை என்று கூறினார்.
இயேசுவை பாலைநிலத்தில் சோதித்த சாத்தான், அவரை சிறிதுகாலமே விட்டுச் சென்றது, ஆனால் இயேசுவின் வாழ்வில் அது மீண்டும் மீண்டும், ஏன், அவரது வாழ்வின் இறுதிவரை சோதித்தது என, நற்செய்தியாளர் லூக்கா கூறுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
தூய ஆவியானவர் குடியிருக்கும் நம் இதயங்களில் மற்ற ஆவிகள் நுழையாதபடிக்கு எப்போதும் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், பொல்லாத சிந்தனைகள், பொல்லாத எண்ணங்கள், பொறாமை, அழுக்காறு என பல காரியங்கள் எவ்வளவு அடிக்கடி நம்மில் நுழைகின்றன? என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை.
எல்லாக் காரியங்களும் வந்துபோகும் வளாகமாக நம் இதயங்கள் மாறுவதை நாம் உணராவிட்டால், அவ்விதயத்தில் ஆண்டவரால் பேச முடியாது, அவர் பேசுவதைக் கேட்கவும் முடியாது என்றும் உரைத்த திருத்தந்தை, இன்று எனது ஆன்மாவுக்கு என்ன நடந்தது, எனது இதயத்தில் எவையெல்லாம் நுழைந்தன என்பதை நாளின் முடிவிலும், இரவிலும் நாம் பரிசோதனை செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
நம் முன்னிலையிலும், கடவுளின் முன்பாகவும் ஒவ்வொரு நாளின் முடிவிலும் நம் இதயத்தைப் பரிசோதனை செய்து தீயவனிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.