2014-10-10 16:13:17

2 கோடியே 20 இலட்சம் பேர் மனச்சிதைவு நோய்ப் பாதிப்பு


அக்.10,2014. கடும் மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், அவர்களின் வாழ்வை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்தும் சிந்தித்துப் பார்ப்பதற்கு உலக மனநல நாள் நம் எல்லாருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
அக்டோபர் 10, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனநல நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்கிசோபிரினியா(Schizophrenia) என்றழைக்கப்படும் மனச்சிதைவு நோய் மற்றும் பிற நோய்களால் தாக்கப்பட்டுள்ளவர்கள் குறித்துச் சிந்திப்பதற்கு இந்நாள் அழைப்பு விடுக்கின்றது என்று கூறியுள்ளார் பான் கி மூன்.
உலகளவில் ஏறக்குறைய 2 கோடியே 20 இலட்சம் பேர், எண்ணம், உணர்வு செயல் ஆகியவற்றில் தொடர்பில்லாத மூளைக்கோளாறு நோயாகிய ஸ்கிசோபிரினியாவால் தாக்கப்பட்டுள்ளனர். இத்தகைய மக்கள், மற்றவர்களைவிட 10 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இறந்து விடுகின்றனர்.
மனச்சிதைவு நோய்க்கு பல காலக்கட்டங்களில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நவீனகால அறிவியல் முன்னேற்றங்கள் மரபணுக்களில் எற்படும் மாற்றங்களே இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன. சாதகமற்ற வாழ்க்கைச்சூழல், மனஅழுத்தம், குழந்தைப் பருவத்தில் மனம் மற்றும் உடல்ரீதியான பாதிப்புகள், போதைப் பழக்கங்கள், கலாச்சார மாற்றங்கள் போன்றவை இந்த மரபணு மாற்றங்களை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
மனச்சிதைவு நோய் மருந்துகளால் குணப்படுத்தக்கூடியதே.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.