2014-10-09 16:42:28

திருத்தந்தை : கடவுள் நமக்குக் கொடுக்கும் மிகப்பெரிய கொடை தூய ஆவியார்


அக்.09,2014. நாம் செபிக்கும்போது நிறையக் காரியங்களுக்காக மன்றாடுகிறோம், ஆனால் கடவுள் நமக்குக் கொடுக்கும் மிகப்பெரிய கொடை தூய ஆவியாரே என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில், இடைவிடாமல் கேட்டு தனது தேவைகளைப் பூர்த்திசெய்த மனிதர் பற்றிய உவமையை விளக்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
கடவுளிடம் அளவிடமுடியாத கருணை உள்ளது, அவரின் கருணை மன்னிப்பது மட்டுமல்ல, அதைவிட அதிகமதிகமானது, நாம் கேட்பதற்கு அதிகமாகவே அவரது கருணை கொடுக்கின்றது என்றும் விளக்கினார் திருத்தந்தை.
இந்நாளைய நற்செய்தி வாசகத்தில், நண்பர், வானகத்தந்தை, கொடை ஆகிய மூன்று சொற்களைக் கோடிட்டுக் காட்டிய திருத்தந்தை, நண்பகலில் தனது நண்பரிடம் சென்று கேட்ட மனிதர் போன்றது செபம் என்று இயேசு தம் சீடர்களுக்கு விளக்குகிறார் என்றும் கூறினார்.
செபம் என்பது, கேட்பது, தேடுவது மற்றும் கடவுளின் இதயத்தைத் தட்டுவது என்றும், கடவுள் நாம் கேட்கும் எதையோ ஒருபொழுதும் கொடையாக வழங்குவதில்லை என்றும், தம்மிடம் கேட்பவருக்கு அதைவிட மேலாகத் தூய ஆவியாரைக் கொடையாக வழங்குகிறார், இதுவே நம் வானகத்தந்தையின் உண்மையான கொடை என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.