2014-10-09 16:42:42

ஆயர்கள் மாமன்றம் : திருஅவை, பயணம் செய்யும் மக்களோடு உடன்செல்லும் சுடர்


அக்.09,2014. பிரிந்திருக்கும் குடும்பங்கள், திருமண முறிவுபெற்றுள்ள அல்லது திருமண முறிவுபெற்று மீண்டும் திருமணம் செய்துள்ளவர்கள், கணவர் அல்லது மனைவியைப் பிரிந்து தனியாக வாழும் பெற்றோர், வளர்இளம் வயது தாய்மார், பிரிந்திருக்கும் குடும்பங்களின் பிள்ளைகள்.. இவை போன்ற மேய்ப்புப்பணிக்குக் கடினமாக உள்ள சூழ்நிலைகளில் குடும்பங்களுக்குத் திருஅவை என்ன செய்ய இயலும் என்பது குறித்து இப்புதன் மாலை பொது அமர்வில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இப்புதன் மாலை 4.30 மணிக்குத் தொடங்கிய, குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் எட்டாவது பொது அமர்வு, இம்மாமன்றத்தின் மூன்று தலைவர் பிரதிநிதிகளில் ஒருவரான பிரேசில் நாட்டின் Aparecida பேராயர் கர்தினால் Raymundo Damasceno Assis அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த 8வது பொது அமர்வில், தென்னாப்ரிக்காவின் ஸ்டீபன், சான்ட்ரா கோன்வே ஆகிய இரு பார்வையாளர் தம்பதியரின் சாட்சியங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
நிதிப் பிரச்சனைகள், திருமண வாழ்வில் பிரமாணிக்கமின்மை, குடும்பத்தின் பின்னணி ஆகிய விவகாரங்கள் பொதுவான பிரச்சனைகளாக உள்ளன என்றும், தற்போது அதிகமாகக் காணப்படுகின்ற, “திருமணமாகாமல் தம்பதியர் போன்று” வாழும் வாழ்வு முதலில் அப்பாவித்தனமாகத் தொடங்கப்பட்டாலும், நாளடைவில் தம்பதியர்க்கிடையில் பிளவு ஏற்படுகின்றது என்றும் இவ்விருவரும் கூறினர்.
இரண்டாவது திருமண வாழ்வில் இருப்போருக்கு அருளடையாளங்கள் தடைசெய்யப்படுவதால், தம்பதியர்க்கிடையில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் மனக் காயமும், நீண்டகாலக் கோபமும் மீண்டும் அவர்களின் கடந்தகால கசப்பான உறவுகளைத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது என்று கோன்வே தெரிவித்தார்.
தாங்கள் நடத்தும் உளவியல் பயிற்சியில் சேருவதற்கு, ஓரினப் பாலினச் சேர்க்கையாளரும், பிற தம்பதியரும் விண்ணப்பிக்கின்றனர் என்பதையும் தென்னாப்ரிக்காவின் ஸ்டீபன், சான்ட்ரா கோன்வே தம்பதியர் எடுத்துக்கூறினர்.
ஸ்டீபன், சான்ட்ரா கோன்வே தம்பதியர், தென்னாப்ரிக்காவின் Retrouvailles நிறுவனத்தின் மாநிலத் தலைவர்களாவர். பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு உதவி செய்யும் இந்நிறுவனம், கடந்த 15 ஆண்டுகளாக, டர்பன் நகர மக்களுக்கும், உலகிலுள்ள பிற குழுக்களுக்கும் சேவையாற்றி வருகின்றது. ஒவ்வோர் ஆண்டும் பன்னாட்டு அளவில் ஏறக்குறைய பத்தாயிரம் தம்பதியர் இந்நிறுவனத்தின் பயிற்சியில் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.