2014-10-08 16:38:01

பிரிந்து வாழும் குடும்பங்களை அன்பு வார்த்தைகளால் திருஅவை குணப்படுத்த பரிந்துரை


அக்.08,2014. தம்பதியர் பிரிந்து வாழ்வதால் கவலைகளில் வாழும் குடும்பங்களின் பிளவுகளை அன்பின் வார்த்தைகளால் குணப்படுத்தவும், பிள்ளைகளின் மனங்களுக்கு அமைதியை அருளவும் வேண்டியது திருஅவையின் கடமை என்று இப்புதன் காலையில், உலக ஆயர்கள் மாமன்றத்தில் கூறினார் ஸ்காட்லாண்ட் பேராயர் Philipp Tartaglia.
இப்புதன் காலை 9 மணிக்குத் தொடங்கிய, குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் ஐந்தாவது பொது அமர்வின் ஆரம்பச் செபத்தை வழிநடத்திய கிளாஸ்கோ பேராயர் Tartaglia அவர்கள் வழங்கிய சிந்தனையில், குடும்பத்தில் கணவரும் மனைவியும் மகிழ்வோடு சேர்ந்து வாழ்ந்து, குழந்தைச் செல்வங்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்போது, அக்குடும்பத்தில் அன்பு பல மடங்காக விரிவடைகிறது என்று தெரிவித்தார்.
குடும்பங்கள் இவ்வாறு மகிழ்வோடு வாழும்போது திருமண அன்பு மற்றும் குடும்ப அன்பின் அழகையும் எளிமையையும் உறுதிப்படுத்த திருஅவையால் இயலுகின்றது, ஆனால், குடும்பங்கள் பிளவுபட்டிருக்கும்போது அன்பு முதலில் காயமடைகின்றது, பிள்ளைகளின் அமைதியான இதயம் சீர்குலைகின்றது, அவர்கள் தங்கள் பெற்றோரை ஒரே நேரத்தில் அன்புசெய்கின்றனர் மற்றும் வெறுக்கின்றனர் என்று கூறினார் பேராயர் Tartaglia.
இம்மாதிரியான சோகமான சூழல்களில், கணவரும் மனைவியும் பிள்ளைகளுடன் அன்பின் வரலாற்றில் புதிய பக்கத்தை, புதிய விசுவாசமான வாழ்வை, புதிய நம்பிக்கையை, புதிய உறுதிப்பாட்டை, புதிய ஒப்புரவைப் பெறுவதற்குக் திருஅவை உழைக்க வேண்டுமென மாமன்றத் தந்தையரைக் கேட்டுக்கொண்டார் ஸ்காட்லாண்ட் பேராயர் Tartaglia.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.