2014-10-08 16:01:07

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


அக்.08,2014. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் இடம்பெற்றுவரும் இவ்வேளையிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏறத்தாழ 9.30 மணிக்கே தூய பேதுரு வளாகம் வந்து திருப்பயணிகளைச் சந்திக்கத் துவங்கிவிட்டார். திருத்தந்தையின் மறையுரை 10.30 மணிக்கு என திட்டமிடப்பட்டிருந்தபோதிலும் அதற்கு முன்னரே வளாகம் வந்த திருத்தந்தை, அங்கு குழுமியிருந்த மக்களிடையே வலம்வந்து அவர்களை ஆசீர்வதித்தும் நோயாளிகளைச் சந்தித்தும் சென்றார். இப்புதன் மறையுரையில் கிறிஸ்தவ ஒன்றிப்பை மையமாக வைத்து தன் உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிற கிறிஸ்தவ சபைகளையும் பாரம்பரியங்களையும் சேர்ந்த நம் உடன்வாழ் கிறிஸ்தவர்கள் குறித்து இன்று நாம் நோக்குவோம். கிறிஸ்தவர்களிடையே பிரிவினை என்பது இறைவிருப்பத்திற்கு எதிரானது ஆகும். ஏனெனில், 'எல்லோரும் ஒன்றாயிருப்பார்களாக, இதனால் உலகம் நம்பும்' என, வானகத் தந்தையை நோக்கிய செபத்தில் தன் விருப்பத்தை வெளியிட்டார் இயேசு. அவர் அன்பிலும், நம்மிடையே ஒருவர் ஒருவரிலான ஐக்கியத்திலும் நாம் ஒன்றித்திருக்க வேண்டும் என இயேசு விரும்பியபோதிலும், வரலாறு முழுவதும் திருஅவை ஒன்றிப்புக்கு எதிரான சோதனைகளை அனுபவித்துள்ளதுடன், துன்பம் நிறை பிரிவினைகளுக்கும் நடத்திச் செல்லப்பட்டதையும் கண்டுள்ளது. இந்தப் பிரிவினைகளுக்குள்ளேயே நாம் முடங்கிவிடக் கூடாது. மாறாக, இயேசுவைப் பின்பற்றுவோர் அனைவரும் பேச்சுவார்த்தைகளுக்கு தங்களைத் திறந்தவர்களாகவும், பிறரின் கொடைகளைப் பாராட்டுபவர்களாகவும் விளங்க வேண்டும் என்ற நோக்கில், இயேசுவின் செபத்தோடு நம் செபங்களையும் இணைக்க வேண்டும். இறைவனை அன்புகூர்வதிலும், அவர் அன்பின் கொடைகளைப் பிறருடன் பகிர்வதிலும் நாம், நம்மை பிரிப்பவைகளைவிட இணைப்பவைகள் குறித்து அதிகம் அதிகமாக அறிய வருவோம். நாம் உண்மையின் அடிப்படையில் வாழ்வதன் வழியாகவும், மன்னிப்பதையும் பிறர் அன்பையும் செயல்படுத்துவதன் வழியாகவும், கிறிஸ்துவின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் மேலும் அதிகமாக நெருங்கி வருவோம். மேலும், நாம் ஒருவர் ஒருவரோடு ஒப்புரவாகி, தன் சீடர்கள் அனைவருக்குமென இயேசு விரும்பும் முழு ஒன்றிப்பு எனும் இலக்குக்கு நெருக்கமாக வழிநடத்தப்படுவோம்.
இவ்வாறு தன் புதன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.