2014-10-08 16:38:54

குடும்ப வாழ்வு எதிர்நோக்கும் கலாச்சாரச் சவால்களுக்குப் பதிலளிப்பதாய் மேய்ப்புப்பணிகள் அமைய வேண்டும்


அக்.08,2014. உலகில், குறிப்பாக மேற்கத்தியக் கலாச்சாரத்தில், திருமணம் மற்றும் குடும்ப வாழ்வில் முறிவுகள் ஏற்படுவது, உண்மைகளில் ஏற்படும் நெருக்கடிகள் அல்ல, மாறாக, ஆய்வுமுறைகளில் ஏற்படும் நெருக்கடிகள் என்று உலக ஆயர்கள் மாமன்றத்தில் கூறினர் அமெரிக்கத் தம்பதியர்.
வத்திக்கானில் நடைபெற்றுவரும் குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் நான்காவது பொது அமர்வில் இச்செவ்வாய் மாலையில் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அமெரிக்க ஐக்கிய நாட்டின் Le Crosse மறைமாவட்டத்தின் Jeffery, Alice Heinzen தம்பதியர் இவ்வாறு கூறினர்.
திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு எதிர்நோக்கும் இக்காலத்தியக் கலாச்சாரச் சவால்களுக்குப் பதில் சொல்லாமல், இவ்வாழ்வைப் பாதிக்கும் எதிர்மறை விவகாரங்களைக் களைவதில் மேய்ப்புப்பணித் திட்டங்கள் கவனம் செலுத்துகின்றன என்றும் இந்த அமெரிக்கத் தம்பதியர் கூறினர்.
புதிய சவால்களின் ஒளியில் குடும்பத்திற்கான மேய்ப்புப்பணித் திட்டங்கள் என்ற தலைப்பிலான வரைவுத் தொகுப்பு பற்றிய கருத்துக்களைத் தெரிவித்த திருமதி Alice Heinzen, விசுவாசத்தை தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வதில் முறிந்த குடும்பங்கள் எத்தகைய பிரச்சனைகளைச் சந்திக்கின்றன என்பதை விளக்கினார்.
ஞாயிறு திருப்பலி, மாலையில் செபமாலை செபிப்பது, நோயாளிகளைச் சந்திப்பது, ஏழைகளுக்காகச் சேமித்து வைப்பது, படுக்கப்போகும் முன்னர் செபிப்பது போன்றவை கத்தோலிக்கக் குடும்பங்களில் மறைந்து வருகின்றன என்பதையும் எடுத்துச்சொன்னார் Alice Heinzen.
இச்செவ்வாய் மாலையில் தொடங்கிய இம்மாமன்றத்தின் நான்காவது பொது அமர்வு, மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே அவர்கள் தலைமையில் நடந்தது.
மேலும், இம்மாமன்றத்தின் இச்செவ்வாய் தின பொது அமர்வுகள் குறித்த விபரங்களை திருப்பீடச் செய்தித்தொடர்பாளர் தலைமையிலான குழு பத்திரிகையாளர் கூட்டத்தில் விவரித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.