2014-10-08 16:04:22

அமைதி ஆர்வலர்கள் : 1954ன் நொபெல் அமைதி விருது பெற்ற நிறுவனம்


அக்.08,2014. 1954ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதுக்கென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் UNHCR புலம்பெயர்ந்தோர் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1955, 1956ம் ஆண்டுகளில் நொபெல் அமைதி விருதுகள் ஒருவருக்கும் அறிவிக்கப்படவில்லை. அவ்வாண்டுகளின் அவ்விருதுகளின் நிதி, அவ்விருதின் சிறப்புச் சேமிப்பில் வைக்கப்பட்டது. 1954ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற UNHCR புலம்பெயர்ந்தோர் நிறுவனம், மீண்டும் 1981ம் ஆண்டிலும் இவ்விருதைப் பெற்றது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் புலம் பெயர்ந்த மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கென UNHCR புலம்பெயர்ந்தோர் நிறுவனம் ஆற்றிய அருஞ்சேவைகளுக்கென இவ்விருது வழங்கப்பட்டது. அதுவும் இந்நிறுவனம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலே இவ்விருதை அது தட்டிச் சென்றது. அப்போது அதன் இயக்குனராக இருந்த Dr.G.J.Van Heuven Goedhart அவர்களே இவ்விருதைப் பெற்றாலும், அவ்விருது நிதியான 35,067 டாலர்கள் இந்நிறுவனத்துக்கேச் சென்றது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை உருவாக்கிய அனைத்துலக சமுதாயம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் புலம் பெயர்ந்த மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளைக் கண்ணுற்றது. எனவே அனைத்துலக புலம்பெயர்ந்தோர் நிறுவனமான IROவை 1947ல் உருவாக்கியது. இந்நிறுவனமே புலம்பெயர்ந்தோர் குறித்த விவகாரங்களைக் கவனித்து வந்தது. பின்னர், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நிவாரண மற்றும் மறுவாழ்வு நிர்வாகம் 1944ல் உருவாக்கப்பட்டது. இது, 2ம் உலகப் போரினால் ஐரோப்பா எங்கும் புலம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்களின் துயர்துடைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பின்னர் உலக அளவில் புலம்பெயர்ந்தோர் விவகாரங்கள் தீர்க்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உலக நிறுவனத்துக்கு ஏற்பட்டது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் சூடான வாக்குவாதங்களுக்குப் பின்னர் 1949ம் ஆண்டு டிசம்பரில் UNHCR புலம்பெயர்ந்தோர் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இருந்தபோதிலும், இதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே, 1951ம் ஆண்டில்தான் இந்நிறுவனம் செயல்படத் தொடங்கியது. இந்நிறுவனத்தை நிலையான ஓர் அமைப்பாக இயங்கச் செய்வதற்கு உலக நிறுவனத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்ததே இதற்குக் காரணம்.
1951ம் ஆண்டில், புலம்பெயர்ந்தோர் நிலைமையோடு தொடர்புடைய ஒப்பந்தத்தில், உலக நாடுகள் கையெழுத்திட்ட பின்னர் புலம்பெயர்ந்தோர்க்கான பணிகள் ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் பிற பகுதிகளுக்கும் பரவியது. 1956ல், ஹங்கேரி நாட்டில் ஏற்பட்ட பிரச்சனையினால் புலம்பெயர்ந்தோர் எதிர்கொண்ட நெருக்கடிளைத் தீர்த்து வைப்பதில் UNHCR நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டது. அதற்கு ஓராண்டு சென்று, ஹாங்காக்கில் சீனப் புலம்பெயர்ந்தோருக்கும், அல்ஜீரியாவில் சுதந்திரப் போர் தொடங்கியதை முன்னிட்டு மொரோக்காவுக்கும் டுனிசியாவுக்கும் சென்ற அல்ஜீரியப் புலம்பெயர்ந்தோருக்கும் UNHCR நிறுவனம் உதவியது. இதுவே UNHCR நிறுவனத்தின் உலகளாவிய மனிதாபிமானப் பணிக்கு வித்திட்டது என்று சொல்லலாம்.
1960களில் ஆப்ரிக்காவில் காலனி ஆதிக்கம் நீங்கத் தொடங்கியபோது பெருமளவாக மக்கள் புலம்பெயர்ந்தனர். இது UNHCR நிறுவனத்துக்குப் பெரும் சவாலாக இருந்தது. பத்தாண்டுகளுக்குள் இந்நிறுவனச் செலவினங்களுள் மூன்றில் இரண்டு பகுதி ஆப்ரிக்காவுக்கே செலவானது. பங்களாதேஷ் நாடு உருவாகியபோது கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் பெருமளவாக வந்த மக்கள், இன்னும், வியட்நாம் சண்டையினால் அந்நாட்டைவிட்டு வெளியேறிய இலட்சக்கணக்கான மக்கள் என ஆசியாவில் இந்நிறுவனத்தின் பணிகள் விரிந்தன. 1980களில் இந்நிறுவனம் தனது உறுப்பு நாடுகளிலிருந்து புதிய சவால்களை எதிர்கொண்டது. ஏனெனில் அதிக அளவில் இருந்த புலம்பெயர்ந்த மக்களை, தங்கள் நாடுகளில் குடியமர்த்த விரும்பவில்லை. உலகில் பனிப்போர் முடிந்த பின்னர் இனங்களுக்குள்ளே ஏற்பட்ட மோதல்கள், புலம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையை அதிகரித்தன. 1999ல் முன்னாள் யுக்கோஸ்லாவியப் பிரச்சனை, 1994ல் ஆப்ரிக்காவின் ருவாண்டா இனப்படுகொலை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஏன் இந்நாள்களில் ஐஎஸ் இஸ்லாம் நாடு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு துருக்கியில் ஏறக்குறைய 1,38,000 சிரியா குர்த் இனத்தவர் உள்ளனர். மேலும், முப்பது இலட்சம் சிரியா நாட்டினர் பிற நாடுகளிலும் புலம்பெயர்ந்துள்ளனர். நாடுகளில் சண்டைகளும், இயற்கைப் பேரிடர்களும் அதிகரிக்க அதிகரிக்க UNHCR புலம்பெயர்ந்தோர் நிறுவனத்தின் மனிதாபிமானப் பணிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மனிதம் வாழட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.