2014-10-07 16:05:26

விவிலியத் தேடல் – விதைப்பவர் உவமை


RealAudioMP3 "உலகின் ஏதோ ஒரு மூலையில், யாரோ ஒருவர் பாடுவதற்கும், ஆடுவதற்கும், கதை சொல்வதற்கும், கதை கேட்பதற்கும் இருக்கும்வரை வாழ்வு தொடரும்" (Life will go on as long as there is someone to sing, to dance, to tell stories and to listen) என்று அமெரிக்கப் பழங்குடியில் பிறந்த வழக்கறிஞர் Oren Lyons அவர்கள் கூறியுள்ளார். கலையும் கதையும் இவ்வுலகில் இருக்கும்வரை வாழ்க்கை தொடரும் என்பது, மனதுக்கு நிம்மதி தரும் ஓர் எண்ணம்.
கதைகளுக்கு உள்ள ஆற்றலை நன்கு உணர்ந்தவர் இயேசு. எனவே, அவர் கடவுளைப்பற்றி, கடவுளின் அரசைப்பற்றி விரிவான இறையியல் விளக்கங்களை சொல்லித் தரவில்லை. கடவுளையும், அவரது அரசையும் அவர் கதைகள், மற்றும் உவமைகள் வழியே அறிமுகப்படுத்தினார்.
நற்செய்தியாளர் மத்தேயு தொகுத்துள்ள உவமைகளிலேயே புகழ்பெற்றது 'விதை விதைப்பவர் உவமை' என்று சொன்னால் அது மிகையல்ல.
மத்தேயு நற்செய்தி 13: 3-9
இயேசு உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.
மத்தேயு நற்செய்தியில் காணப்படும் புகழ்பெற்ற உவமை இது என்று சொல்லும்போது, கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது. புகழ்பெற்றவை எதையும், அடிக்கடி கேட்கவும், பார்க்கவும் வாய்ப்புக்கள் எழுவதால், "ஓ, இது நமக்குத் தெரிந்ததுதானே!" என்ற ஓர் அலட்சிய மனநிலை நமக்குள் தோன்றும் ஆபத்து உண்டு. இயேசுவின் புகழ்பெற்ற கூற்றுக்களுக்கும் குறிப்பாக, அவர் சொன்ன புகழ்பெற்ற உவமைகளுக்கும் இதே ஆபத்து உள்ளது. நமது அலட்சியப் போக்கை உணர்ந்தவர்போல, 'விதை விதைப்பவர் உவமை'யின் இறுதியில் இயேசு ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்: "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" (மத்தேயு 13:9) என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவு செய்கிறார். இவ்வார்த்தைகளை இயேசு கூறும்போது, "நான் சொன்ன உவமையைக் கூர்ந்து கவனியுங்கள்" என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.
எதைக் கவனிப்பது? இயேசு கூறும் இவ்வுவமையில், விதைப்பவர், விதை, விளைநிலம் என்ற மூன்று கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றில், விதை, விளைநிலம் இரண்டையும் குறித்து இயேசு விளக்கங்கள் தருகிறார். இந்த உவமையைச் சிந்திக்கும்போதெல்லாம், நமது சிந்தனைகளும் பொதுவாக விதை, விளைநிலம் என்பனவற்றையேச் சுற்றிவந்துள்ளன. இன்று, ஒரு மாற்றமாக, நாம் விதைப்பவர் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.
விதைப்பவர் எடுத்துச் சென்ற விதைகள், விளைநிலத்தில் மட்டுமல்ல, சுற்றியிருந்த பாதை, பாறைகள், முட்புதர்கள் என்று பல இடங்களிலும் விழுந்தன என்று இயேசு கூறினார். இது விதைப்பவரின் கவனக்குறைவால் நிகழ்ந்ததா அல்லது, விதைப்பவர் தாராள மனதுடன் விதைகளை அள்ளித் தெளித்தாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இயேசுவின் இவ்வுவமை, இறை வார்த்தையை மையப்படுத்தியது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, விதைப்பவர் இவ்வாறு செயல்பட்டது, அவரது தாராள மனதைக் காட்டுகிறது என்ற பொருளே பொருத்தமாக உள்ளது.
விதை விழும் இடம், பாதையோரமாக இருந்தால் என்ன, பாறையாக இருந்தால் என்ன, முட்புதராக இருந்தால் என்ன... அவற்றிலும் விதைகளைத் தெளிப்பது, இறைவார்த்தையைச் சுமந்து செல்பவரின் கடமை. பாதையோரம் விழுந்தால் பயன்தருமா? பாறையிலும், முட்புதரிலும் விதைப்பது மதியீனம் அல்லவா? என்று கணக்குப்பார்த்து, தயங்கித் தயங்கிச் செயல்படுவோர், இறை வார்த்தை என்ற விதைக்கு தடை விதிப்பவர்களே!
தயக்கம் ஏதுமின்றி, நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தும் இறைவனிடம், "ஆற்றில் கொட்டினாலும், அளந்து கொட்டவேண்டும்", "பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும்" என்பன போன்ற பழமொழிகள் அர்த்தமற்று போகும். அத்தகைய இறைவனின் வார்த்தைகளை உலகில் விதைக்கச் செல்லும் நாம், தரம் மிகுந்த, நன்கு உழுது உரமிடப்பட்ட நிலத்தில் மட்டுமே விதைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றால், அது இறைவார்த்தையை விலங்கிட்டு சிறைப்படுத்தும் முயற்சியாக அமையும்.
நாம் என்னதான் தடைகள் விதித்தாலும், விலங்கிட்டு சிறையில் அடைத்தாலும், இறைவார்த்தை, தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை இறைவாக்கினர் எசாயா திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும், இவ்வார்த்தைகளை இறைவனே நேரடியாகச் சொல்வதுபோல் ஒலிக்கின்றன:
இறைவாக்கினர் எசாயா 55: 10-11
மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.
விதைப்பவர் உவமையில் இயேசு அறிமுகப்படுத்தும் விதைப்பவர் வழியாக நமக்கு நல்லதொரு பாடத்தை புகட்டுகிறார். அதாவது, இனம், குலம், மதம், தரம் என்ற பல எல்லைகளை நாமே வரையறுத்துக்கொண்டு, அந்த எல்லைகளுக்குள் மட்டுமே இறைவார்த்தை என்ற விதையைப் பயன்படுத்த வேண்டும் என நினைப்பது தவறு என்பதை இயேசு இந்த விதைப்பவர் வழியே சொல்லித்தருகிறார்.
நிபந்தனைகள் ஏதுமின்றி, தங்கு தடையின்றி, தாராளமாக, இறைவார்த்தையை அள்ளித் தெளிக்கவேண்டும் என்பதை இயேசு உவமையில் மட்டும் கூறாமல், தன் வாழ்விலும் கடைபிடித்தார். மதத் தலைவர்கள் என்ற பாறைகளில் அவர் விதைத்த வார்த்தைகள் வெறுப்பாக வெடித்தாலும், அவர் சளைக்காமல் விதைத்தார். பாவம் என்ற முட்புதர்களில் சிக்கியிருந்தோரிடம், அவர் விதைத்த வார்த்தைகள் சென்றடைந்தன என்பதை நற்செய்தியில் நாம் அடிக்கடி காண்கிறோம். வெறும் ஆர்வக் கோளாறால் அவரைக் காண வந்தவர்கள் பாதையோர நிலங்கள் என்பதை அறிந்தும் அவர் அங்கு விதைப்பதை நிறுத்தவில்லை.
‘இறைவார்த்தையை விதைப்பது’ என்றதும், கோவில்களிலும், வேறு பல மத மேடைகளிலும் இறைவார்த்தையைப் பறைசாற்றுவதை மட்டும் எண்ணவேண்டாம். இறைவார்த்தையை விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக, சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் விளைச்சல்!
வாழ்க்கையால் இறைவார்த்தையைப் பறைசாற்றிய பலரில், Dr. Albert Schweitzerம் ஒருவர். இவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியொன்று இப்போது என் நினைவை நிறைக்கிறது. இவர் ஆப்ரிக்காவில் மேற்கொண்ட அற்புதமான மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகள் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை உலகில் வளர்க்க இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் 1952ம் ஆண்டு உலக அமைதிக்கான நொபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இப்பரிசைப் பெற்ற அடுத்த ஆண்டு இவர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு சென்றார். அவரை வரவேற்க பத்திரிக்கையாளர்கள், பெரும் தலைவர்கள் என்று பலர் அவர் வரவிருந்த இரயில் நடைமேடையில் காத்திருந்தனர். மருத்துவர் Albert அவர்கள் இரயிலை விட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. தன்னை சிறிது நேரம் மன்னிக்க வேண்டும் என்று வேண்டியபடி அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவர் சென்றார். அந்த நடைமேடையில் இரு பெட்டிகளைச் சுமந்தபடி தவித்துக் கொண்டிருந்த ஒரு வயதான கறுப்பின பெண்மணிக்கு உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டார். பின்னர் அவருக்காகக் காத்திருந்த கூட்டத்திடம் வந்தார் மருத்துவர் Albert. இதைக்கண்ட ஒரு பத்திரிகையாளர் மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில் வாய் வார்த்தையாக ஒலித்த மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இதோ, இங்குதான், முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையைப் பார்க்கிறேன்" என்று கூறினார்.
Albert Schweitzer அவர்கள், 25 வயது இளைஞனாக இருந்தபோது மறையுரை வழங்குவதில், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதில் தன்னிகரற்ற புகழ் பெற்றிருந்தார். ஆனால், தனது 30வது வயதில் அவர் மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியில் மருத்துவ மனையொன்றை நிறுவி பணிசெய்யத் துவங்கினார். பல்வேறு இடர்கள், சிறைவாசம் என்று அவர் வாழ்வில் சவால்கள் வந்தாலும், வறுமையில் வாடிய ஆப்ரிக்க மக்களுக்கு மருத்துவப் பணிகளைப் பல ஆண்டுகள் செய்துவந்தார். இளமையில் நற்செய்தியை வார்த்தைகளாய் முழங்கிப் புகழ்பெற்ற Albert, தன் வாழ்வின் பிற்பகுதியில் நற்செய்தியை வாழ்வாக்கினார். Albert போன்ற நற்செய்திப் பணியாளர்களின் பறைசாற்றுதலே இந்த உலகில் இறைவார்த்தையை இருபது நூற்றாண்டுகளாய் அதிகமாய், ஆழமாய் பரப்பி வந்துள்ளது. வாழ்வால் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்குப் பெரும் அறிவாளிகள், பேச்சாளர்கள் தேவையில்லை. இயேசுவின் சீடர்களே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
விதை விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம், தங்கு தடையேதுமின்றி இறைவார்த்தையை விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை நம் வாய்மொழியாக விதைப்பதைவிட, நமது வாழ்வின் வழியே விதைப்பதில் ஆற்றலோடு செயலாற்றுவோம். நாம் இறைவார்த்தை வழி, உன்னத வாழ்வு வாழ்வதற்கு, நம்மைச் சுற்றியிருப்போரும் உன்னத வாழ்வு பெறவேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்குத் துணை புரிவாராக!

விவிலியத் தேடல் நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியது வத்திக்கான் வானொலி.








All the contents on this site are copyrighted ©.