2014-10-07 11:59:51

குடும்ப வாழ்வுக்கு ஆதரவுதரும் புதிய வழிகளைத் தேர்ந்து தெளியும் தலைவர்கள் திருஅவைக்குத் தேவை


அக்.07,2014. தங்களின் மக்கள் பேசுவதைக் கேட்கவும், நேர்மையுடன் பேசவும், குடும்ப வாழ்வுக்கு ஆதரவுதரும் புதிய முறைகளைக் கருத்தொருமித்து தேர்ந்து தெளியும் வழிகளைத் தேடவுமான தலைவர்கள் திருஅவைக்குத் தேவைப்படுகின்றனர் என்று, இத்திங்கள் பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தனர் மாமன்றத் தந்தையர்கள்.
இத்திங்கள் காலையில் தொடங்கிய குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் முதல் அமர்வு பற்றி, நான்கு மாமன்றத் தந்தையர்கள் நடத்திய பத்திரிகையாளர் கூட்டத்தில் இவ்வாறு அறிவித்தனர்.
ஹங்கேரி கர்தினால் பீட்டர் எர்டோ, பாரிஸ் கர்தினால் André Vingt-Trois, இத்தாலிய பேராயர் புரூனோ ஃபோர்த்தே, மெக்சிகோ பேராயர் கார்லோஸ் அகுய்ரார் ரேத்தெஸ் ஆகிய மாமன்றத் தந்தையர்கள் இப்பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசினர்.
இம்மாமன்றத்தின் பொது அறிக்கையாளரான கர்தினால் எர்டோ அவர்கள் பேசுகையில், தனது மக்களின் தேவைகளுக்குச் செவிமடுக்கும் ஒரு திருஅவை பற்றி நன்றாகச் சிந்திப்பதற்காக நடைபெறும் இச்சிறப்பு மாமன்றம் செயல்படும் முறையிலுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கினார்.
இம்மாமன்றத்தின் மூன்று தலைவர் பிரதிநிதிகளில் ஒருவரான பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்கள் பேசுகையில், அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் சிறுபான்மையினரின் கருத்துக்களை உதறித்தள்ளுவதற்கு முயற்சிக்கும் பாராளுமன்ற விவாதங்கள் போன்றது அல்ல இந்த மாமன்றம் என்பதை பத்திரிகையாளர்களுக்கு நினைவுபடுத்தினார்.
திருஅவை வளர்வதற்கு உதவும் முக்கியமான விவகாரங்கள் பற்றிப் பேசுவதற்காகத் திருஅவைத் தலைவர்கள் நடத்தும் அமர்வுகள் இது என்றும் கர்தினால் Vingt-Trois கூறினார்.
இம்மாமன்றத்தின் சிறப்புச் செயலராகிய பேராயர் ஃபோர்த்தே அவர்கள் பேசுகையில், இதில் கலந்துகொள்ளும் அனைவரும் முற்சார்பு எண்ணங்கள் இன்றி நேர்மையாகவும் சுதந்திரத்துடனும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு திருத்தந்தை கூறியதை எடுத்துச் சொன்னார்.
இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் ஆயர் பேரவைகளின் தலைவர் பேராயர் ரேத்தெஸ் அவர்கள் பேசுகையில், உலகின் பலவேறு பகுதிகளில் குடும்பங்களின் உண்மையான சூழல்களின் அடிப்படையில் தேர்ந்து தெளிந்த தொடர் மேய்ப்புப்பணிகளின் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.