2014-10-07 16:14:11

உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் பிலிப்பீன்ஸ் தம்பதியர்


அக்.07,2014. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் மூன்றாவது பொது அமர்வு இச்செவ்வாய் காலை ஒன்பது மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னிலையில் தொடங்கியது.
இச்செவ்வாய் காலை பொது அமர்வு இம்மாமன்றத்தின் மூன்று தலைவர் பிரதிநிதிகளில் ஒருவரான மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே அவர்கள் தலைமையில், “குடும்பத்தின் நற்செய்தியும் இயற்கைச் சட்டமும்”, “குடும்பமும் கிற்ஸ்துவில் மனிதரின் அழைப்பும்” ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது.
இவ்வமர்வைத் தொடங்கி வைத்துப் பேசிய கர்தினால் தாக்லே அவர்கள், இம்மாமன்றத்தின் விவாதத்திற்கென தயாரிக்கப்பட்ட Instrumentum laboris என்ற வரைவின் முதல் பகுதியிலுள்ள பிரிவுகள் 3 மற்றும் 4 குறித்து இன்று கருத்துப் பகிர்வுகள் இடம்பெறும் எனக் கூறி, இந்த அமர்வில் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பிலிப்பைன்ஸ் தம்பதியரை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
கிறிஸ்துவுக்காகத் தம்பதியர் என்ற CFC அனைத்துலக கத்தோலிக்கப் பொதுநிலை இயக்கத்தின் தலைவரான திரு.ஜார்ஜ் காம்ப்போஸ் மற்றும் அவரது மனைவி ஆற்றிவரும் பணிகளையும் விளக்கினார் கர்தினால் தாக்லே.
இப்பொது அமர்வில் பேசிய மனிலா உயர்மறைமாவட்டத்தின் திருமதி ஜார்ஜ் காம்ப்போஸ், CFC கிறிஸ்துவுக்காகத் தம்பதியர் இயக்கத்தின் பணிகள் குறித்தும், தனது வாழ்வில் இயேசு செய்த அற்புதங்கள் குறித்தும் விளக்கினார்.
தான் 4வது தடவையாக கர்ப்பம் தரித்திருந்தபோது உயிருக்கு ஆபத்து என்றநிலையில் கர்ப்பத்தைக் கலைக்காமல் இருந்தது, தற்போது தனது குழந்தையும் தானும் நலமுடன் இருப்பது, தனது புற்றுநோய்க் குணமாகியிருப்பது என பல காரியங்கள் பற்றிக் கூறினார் திருமதி ஜார்ஜ் காம்ப்போஸ்.
CFC கிறிஸ்துவுக்காகத் தம்பதியர் இயக்கம் பல்வேறு நிலையிலுள்ள தம்பதியருக்கு உதவி செய்து வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.