2014-10-07 15:57:53

அக்டோபர் 08, புனிதரும் மனிதரே - தொழுநோயுற்றோரும் மனிதர்களே


'ஹவாய் தீவுகள்' என்று சொன்னதும், விடுமுறையைக் கழிக்கும் உல்லாசத் தீவுகள் என்ற கற்பனை நம் மனங்களில் தோன்றும். ஆனால், 19ம் நூற்றாண்டில் அத்தீவுகளில் ஒன்று தொழுநோயுற்றோரின் சிறையாக விளங்கியது. தொழுநோயால் பாதிக்கப்பட்டோரை சமுதாயத்திலிருந்து விலக்கிவைப்பதற்கு மோலக்காய் (Molokai) தீவு பயன்படுத்தப்பட்டது.
அத்தீவில் ஒதுக்கப்பட்டிருந்த மக்களுக்குப் பணியாற்ற 1873ம் ஆண்டு, டேமியன் (Damien de Veuster) என்ற இளம் அருள் பணியாளர் சென்றார். 1840ம் ஆண்டு, பெல்ஜியம் நாட்டில் பிறந்த டேமியன், திருஇருதய அருள் பணியாளர்கள் துறவு சபையில் தன் 20வது வயதில் சேர்ந்தார். தன் துறவு வாழ்வில், இயேசு சபையின் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களை தன் அருள் காவலராக எண்ணி வந்தார். அவரைப் போல தானும் மறைபரப்புப் பணிகள் செய்ய விழைந்தார். அருள் பணியாளராக திருநிலை பெற்றதும், தன் 33வது வயதில் மோலக்காய் தீவை அடைந்தார்.
உடல் அளவில் தொழுநோயாளர்கள் அனுபவித்த வேதனைகளைவிட, உள்ளத்தளவில் அவர்கள் அனுபவித்த வேதனைகள் மிகக் கொடியவை என்பதை அருள்பணி டேமியன் அவர்கள் உணர்ந்தார். எனவே, நோயுற்ற அவர்களின் உள்ளங்களில் 'தாங்களும் மனிதர்களே' என்ற மதிப்பை வளர்க்க அரும்பாடு பட்டார். நோயுற்றோரை பல குழுக்களாகப் பிரித்து, மோலக்காய் தீவில் சாலைகள், மருத்துவமனைகள், சிறு இல்லங்கள் ஆகியவற்றை உருவாக்கும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தினார்.
அன்றைய நிலவரப்படி, தொழுநோயுற்றோர் இறப்பது உறுதி என்ற நிலை இருந்ததால், அவர்கள் அனைவரும் தங்கள் மரணத்தை மதிப்புடன் எதிர்கொள்ள அருள்பணி டேமியன் அவர்களைப் பழக்கினார். இதற்கு உதவியாக, இறந்தோரை அடக்கம் செய்யும் பெட்டிகளை கலைவண்ணத்துடன் செய்யவும், அவர்களை அடக்கம் செய்யும் கல்லறைத் தோட்டத்தை அழகுற உருவாக்குவதற்கும் தொழுநோயுற்றோருக்கு அவர் பயிற்சிகள் அளித்தார்.
தொழுநோயுற்றோர் நடுவே, 16 ஆண்டுகள் பணியாற்றிய அருள்பணி டேமியன் அவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். 1889ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இறைவனடி சேர்ந்த அருள்பணி டேமியன் தே வூஸ்டர் (Damien de Veuster) அவர்களை, 1995ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் முத்திப்பேறு பெற்றவராகவும், 2009ம் ஆண்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் புனிதராகவும் உயர்த்தினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.