2014-10-06 15:26:32

வாரம் ஓர் அலசல் – பேராசை எனும் நெருப்பு


அக்.06,2014 RealAudioMP3 . அன்பு இஸ்லாமிய நெஞ்சங்களே, இத்திங்கள்கிழமையன்று நீங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடிய தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளுக்கு எம் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். "கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது" என்பதை உணர்த்தி கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து தவறக்கூடாது என இந்தப் பக்ரீத் பெருநாள் அறிவுறுத்துகிறது இந்த நல்ல நாளில் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை நினைவுபடுத்துவது வாழ்வுக்குப் பயன்தரும். "அக்கிரமம் செய்கிறவர் நிச்சயமாக அவரையே அக்கிரமத்தில் மூழ்கடிக்கிறார். ஆனால், அவரால் இதனை உணர்ந்துகொள்ள முடிவதில்லை; பேராசையை விட்டும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் உண்மை பேசுங்கள். அது அழிவைத் தந்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்...." இவ்வாறு ஒவ்வொரு மதமுமே மனித சமுதாயத்துக்கு எளிய, உயர்ந்த வழிமுறைகளைப் போதித்து வருகின்றது. அப்போதனைகளை அனைத்து மக்களும் பின்பற்றி வாழ்ந்தால் இந்தப் பூமி வன்முறைகளும் போர்களும் இல்லாத சொர்க்கமாக விளங்கும். பேராசையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்...
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், “இறைவன் தமது கனவை நனவாக்குவதற்கு, பேராசை தடையாய் இருக்கின்றது, எனவே வெளிவேடம், பேராசை, தற்பெருமை இவை குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்” என்று இஞ்ஞாயிறு திருப்பலி மறையுரையில் கூறினார். கடந்த வியாழன் மாலையும், வெள்ளி காலையும் நமது நேர்காணல் நிகழ்ச்சியில் மதுரைப் பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் கூறியதுபோல, நம் சமுதாயத்தில் ஆன்மீக வாழ்வின் மீதான நாட்டம் குறைந்து, பணத்தின்மீதான தேடல் அதிகமாகியுள்ளது. திருமணமான ஒரு வாரத்தில்கூட திருமண முறிவுக்கு விண்ணப்பிக்கின்றனர். இன்னும், கருக்கலைப்பு, கருக்கொலை போன்ற விவகாரங்கள்... இவையெல்லாம் திருஅவையின் மேய்ப்புப்பணிக்குச் சவால்களை முன்வைக்கின்றன. ஆதலால் இவை பற்றி கலந்து பேசுவதற்காக, 14 திருமணமான தம்பதியர் உட்பட கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் என உலகின் 253 பிரதிநிதிகள் வத்திக்கானில் இத்திங்களன்று இரு வார உலக ஆயர்கள் மாமன்றத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தை இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு வத்திக்கான் பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தித் தொடங்கி வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதில் மறையுரையாற்றிய திருத்தந்தை....
RealAudioMP3 “இஞ்ஞாயிறு வாசகங்களில் இறைவாக்கினர் எசாயாவும், நற்செய்தியும் ஆண்டவரின் திராட்சைத் தோட்ட உருவகத்தைப் பயன்படுத்தியுள்ளனர். விவசாயி தனது திராட்சைத் தோட்டத்தைப் பற்றி அக்கறை எடுப்பதுபோன்று, ஆண்டவர் தமது திராட்சைத் தோட்டத்தை, தமது அன்பால் பேணி வளர்க்கும் திட்டத்தைக் கொண்டுள்ளார், இத்திராட்சைத் தோட்டம் ஆண்டவரின் கனவாகும். இச்செடிகளுக்கு மிகுந்த அக்கறை காட்டப்பட வேண்டும். இறைவனின் கனவு அவரது மக்களே. தமது மக்கள் புனித மக்களாக, நீதியின் கனிகளை மிகுதியாக அளிப்பதற்காக மிகுந்த பொறுமையோடும் அன்போடும் அவர்களை நட்டுப் பேணி வளர்த்தார். ஆனால் அவரின் கனவு ஏமாற்றத்தையே அளித்தது. நற்கனிகளைத் தரும் என்று காத்திருக்க, காட்டுப் பழங்களை அவை தந்தன. இறைவன் நீதியை எதிர்பார்த்தார், ஆனால் இரத்தம் சிந்தலையும், நீதியற்ற நிலையையும் கடும்துன்பத்தின் அழுகையையும் அவர் பார்த்தார். அத்தோட்டத்தில் வேலை செய்த விவசாயிகளே இறைவனின் திட்டத்தைப் பாழாக்கினர், அவர்கள் தங்களின் வேலையைச் செய்யாமல் தங்களின் சொந்த ஆதாயங்களையே நினைத்தனர் என்று நற்செய்தி கூறுகிறது. இயேசுவின் இந்த உவமைப் போதனையில் தலைமைக் குருக்களும் மூப்பர்களும், அதாவது வல்லுனர்கள் அத்தோட்டத்தை நிர்வகிப்பவர்கள். இறைவன் தமது கனவாகிய தமது மக்களை, வயலின் விலங்குகளிடமிருந்து பாதுகாத்துப் பேணிக் காக்கும் பொறுப்பை இவர்களிடம் சிறப்பான வகையில் கொடுத்துள்ளார். சுதந்திரம், படைப்பாற்றல் மற்றும் கடின உழைப்புடன் இறைவனின் திராட்சைத் தோட்டத்தைச் பாதுகாக்க வேண்டியது தலைவர்களின் வேலையாகும். ஆனால், அந்த விவசாயிகள் பேராசை மற்றும், தற்பெருமையினால், தாங்கள் விரும்பியவாறு செய்து திராட்சைத் தோட்டத்தை அபகரித்துக்கொண்டனர். இதனால் இறைவனின் தமது மக்களுக்கான கனவு உண்மையாகாமல் அவர்கள் தடை செய்தனர். பேராசைக்குரிய சோதனை எப்பொழுதும் இருக்கின்றது. பணம் மற்றும் அதிகாரத்துக்கானப் பேராசை. இந்தப் பேராசையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, தீய மேய்ப்பர்கள் பிறர்மீது தாங்கமுடியாத சுமைகளைச் சுமத்துகின்றனர். ஆனால் அச்சுமைகளை சுண்டுவிரலால்கூட அவர்களால் அசைக்க முடியாது. ஆயர் மாமன்றத்தில் நாமும் இறைவனின் திராட்சைத் தோட்டத்திற்காக வேலை செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். அழகான மற்றும் திறமையான கருத்துக்களை விவாதம் செய்வதற்காக மாமன்றங்கள் கூடவில்லை. மாறாக, மிகுந்த அறிவுடன் இறைவனின் திராட்சைத் தோட்டத்தை நன்றாகப் பேணி வளர்ப்பதற்காகவும், நம் ஆண்டவர் தம் மக்களுக்காக வைத்திருக்கும் அன்புத் திட்டத்தை, அவரின் கனவை நனவாக்கவும் மாமன்றத்தில் நாம் செயல்பட வேண்டும். இவ்வாறு நாம் குடும்பங்களைப் பாதிக்காக வேண்டுமென இறைவன் நம்மிடம் கேட்கிறார். ஏனெனில் மனித சமுதாயத்திற்கான இறைவனின் திட்டத்தில் ஒருங்கிணைந்த அங்கம் குடும்பம். நாம் எல்லாரும் பாவிகள். மனிதர்களாகிய நம்மில் எப்பொழுதும் இருக்கும் அந்தப் பேராசையால் திராட்சைத் தோட்டத்தை எடுத்துக்கொள்ள சோதிக்கப்படுகிறோம். இறைவனின் கனவு, அவரது சில ஊழியர்களின் போலியான வாழ்வோடு எப்போதும் மோதுகின்றது, நாம் தூய ஆவியால் நம்மை வழிநடத்த அனுமதிக்காவிட்டால் இறைவனின் கனவை நாமும் பாழாக்குவோம்......”
RealAudioMP3 இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். அன்பர்களே, நல்லதொரு அன்புச் சமுதாயம் அமைய வேண்டுமென்ற இறைவனின் கனவை நனவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே உள்ளது. ஒரு வாரத்துக்கும் மேலாக, ஹாங்காங்கில், ஆட்சித் தலைவருக்கான தேர்தலில் சனநாயகச் சீர்திருத்தத்தை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரிட்டனின் காலனியாக இருந்து வந்த ஹாங்காங், 1997ம் ஆண்டு சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல், "ஒரு நாடு, இரு அரசமைப்பு' என்ற கொள்கையின் அடிப்படையில் ஹாங்காங்கை சீனா நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், ஹாங்காங் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2017ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்களை சீன அரசு நியமிக்கும் குழுதான் தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், ஜனநாயக ஆதரவு அமைப்பினரும் போராடி வருகின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ (மேக் இன் இந்தியா) என்ற கொள்கையின் சின்னமாக, உடல் முழுவதும் இயந்திரப் பாகங்கள் சுழலும் சிங்கம் படத்தை அறிமுகப்படுத்தி, “இது சிங்கம் எடுத்துவைக்கும் முதல் அடி” என்று சொல்லியிருக்கிறார். அதாவது, இந்தியா எனும் சிங்கம் இப்போதுதான் தன்னைச் சிங்கமாக உணர்ந்து, முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது என்பதை அவர் சொல்ல விரும்பியதாக தி இந்து நாளிதழ் கணித்துள்ளது. உண்மையில், எதற்காக மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று இந்தியப் பெருநிறுவனங்கள் அவரை முன்நிறுத்தியதோ, அந்த நோக்கத்தை நோக்கி மோடி எடுத்துவைத்திருக்கும் முதல் அடி இது! இந்தியாவில் உருவாக்கி விற்கப்போகிறோமா, இந்தியாவை அறுத்து விற்கப்போகிறோமா? இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. ஆனால், அது கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்வதாக இருக்க வேண்டும். இந்தியாவின் தொழில் கொள்கையில் நிச்சயம் மாற்றம் தேவை; ஆனால், அது இயற்கையையும் சுற்றுச்சூழலையும் அறநெறிகளையும் சிதைக்காமல், நம் சமூகத்தில் தொழில்முறைக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் மாற்றமாக இருக்க வேண்டும். உயிருள்ள சிங்கத்தின் இயக்கத்தை இயந்திரப் பாகங்களின் இயக்கமாகப் பார்க்கும் நவீன இயந்திரச் சிந்தனையிலிருந்து அல்ல; நம்முடைய அறம்சார் தொழில் வரலாற்றிலிருந்தே நாம் நமக்கான பாடத்தைப் பெற முடியும் என்று அவ்விதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
பாதாளம் வரை பாயும் பண வெறி.. பதற வைக்கும் செம்மண் கொள்ளை: அரசுக்கு 1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என புகார் சொல்லி, தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடக்கும் செம்மண் கொள்ளை என்று இஞ்ஞாயிறன்று ஒரு செய்தியை வாசித்தோம். அன்பர்களே, இத்தகைய செய்திகளை நாம் வாசிக்கும்போது பேராசை மனிதரை எப்படியெல்லாம் செயல்படத் தூண்டுகின்றது என்று சிந்திக்க வைக்கின்றது.
நண்பர்களாக இருந்த ஒரு குருவியும், காகமும் ஒரு நாள் இரை தேடச்சென்றன. ஒரு பாயில் தானியங்கள் காய வைத்திருப்பதைக் காகம் கண்டது. இந்தத் தானியங்களை நம் இருவரில் நிறையச் சாப்பிட்டு வெற்றி பெற்றவர் மற்றவரைத் தின்று விடலாம்,'' என்றது காகம். காகம் ஏதோ வேடிக்கைக்குச் சொல்கிறது என்று நினைத்து, குருவி சிரித்துக் கொண்டே ஒத்துக் கொண்டது. குருவி ஒவ்வொரு தானியமாகக் கொத்திக் கொத்தித் தின்றது. ஆனால், காகம் திருட்டுத்தனம் செய்தது. தான் தின்ற ஒவ்வொரு தானியத்துக்கும் அதைப்போல் மூன்று பங்கைப் பாய்க்கு அடியில் குருவிக்குத் தெரியாமல் மறைத்துவிட்டது. "நான்தான் ஜெயித்தேன்! இப்போது உன்னைத் தின்னப் போகிறேன்,'' என்றது காகம். காகத்தின் சூழ்ச்சியைக் குருவி புரிந்துகொண்டது. "சரி நான் சொன்ன சொல் மீற மாட்டேன். ஆனால், என்னைத் தின்பதற்கு முன்பாக நீ உன் அலகைச் சுத்தம் செய்துகொண்டு வா; நீ கண்டதை எல்லாம் தின்னும் அசுத்தமானவன் ஆயிற்றே!'' என்று குருவி பதிலளித்தது. காகம் உடனே ஆற்றை நோக்கிச் சென்றது. ஆனால் ஆறோ, நீ கண்ட அசுத்தங்களையும் தின்பதாக எல்லாரும் கூறுகிறார்களே... உன்னுடைய அலகை என் நீரில் கழுவ வேண்டும் என்றால் பானை ஒன்று கொண்டு வந்து அதில் தேவையான அளவு, நீர் மொண்டு கொள்,'' என்று பதில் கூறியது. காகம் பானைக்காக, கிராமத்திலுள்ள குயவரிடம் சென்றது. குயவரோ, நீ களிமண் கொண்டு வந்தால் பானை செய்து தருகிறேன்,'' என்றார். களிமண் எடுக்கக் காகம் வயலுக்குச் சென்று மண்ணைக் கொத்தத் துவங்கியது. "நீ அழுகிய பொருட்களையும் அசுத்தங்களையும் தின்பவன் என்பது உலகம் அறிந்த உண்மை. உன் அலகால் மண்ணைக் கொத்த நான் அனுமதிக்கமாட்டேன். தேவையானால் மண் வெட்டியால் எடுத்துக் கொள்,'' என்றது பூமி. மண்வெட்டி வாங்கக் கொல்லர் ஒருவரைத் தேடிச் சென்றது காகம். என் உலையில் இப்போது நெருப்பு இல்லையே, நான் மண்வெட்டி செய்து தர வேண்டுமானால், நீ நெருப்புக் கொண்டு வர வேண்டும்,'' என்றார் கொல்லர். காகம் அருகில் இருந்த ஒரு வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நெருப்புத் துண்டு கேட்டதும், அதை எப்படி எடுத்துச் செல்வாய்,'' என்று கேட்டார் அப்பெண். என் முதுகின் மேல்,'' என்றது காகம். அப்பெண்ணும் நெருப்புத் துண்டை காகத்தின் முதுகின்மேல் வைத்தார். காகத்தின் இறக்கைகள் தீப்பிடித்து எரிந்தன. பேராசை பிடித்த காகம் தீயில் எரிந்து சாம்பலாயிற்று.
பேராசை பெரு நட்டம் மட்டுமல்ல, அது நம் வாழ்வையே அழிக்கும் நெருப்பு. பேராசை பெரு நட்டம் வெறும் பழமொழி மட்டுமல்ல, அது பலரின் அனுபவமும்கூட. பிறருக்குத் துன்பம்வரும் வண்ணம் ஆசைப்படுவது பேராசை. எனவே போலித்தனம், பேராசை, தற்பெருமை இவற்றை வாழ்விலிருந்து விலக்கி வைப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.