2014-10-06 16:43:35

திருத்தந்தை : மனித சமுதாயத்திற்கான இறைவனின் திட்டத்தில் குடும்பம் ஒருங்கிணைந்த அங்கம்


அக்.06,2014. வெளிவேடம், பேராசை, தற்பெருமை இவை குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டுமென்று, குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத் தொடக்கத் திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக ஆயர்கள் மாமன்றத்தை இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தித் தொடங்கி வைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இறைவனின் கனவு தனது சில ஊழியர்களின் வெளிவேடத்தோடு எப்போதும் மோதுகின்றது, நாம் தூய ஆவியால் நம்மை வழிநடத்த அனுமதிக்காவிட்டால் இறைவனின் கனவை நாமும் பாழாக்குவோம் என உரைத்தார்.
தனது திராட்சைத் தோட்டச் செடிகளாகிய மக்கள் புனித மக்களாக மாறி, நீதியின் கனிகளை மிகுதியாக அளிப்பதுவே இறைவனின் கனவு என்ற திருத்தந்தை, ஆனால் அவரின் கனவு ஏமாற்றத்தையேப் பெற்றது, ஏனெனில், நற்கனிகளைத் தரும் என்று காத்திருக்க, காட்டுப் பழங்களை அவை தந்தன எனவும் கூறினார்.
மிகுந்த அறிவுடன் இறைவனின் திராட்சைத் தோட்டத்தை நன்றாகப் பேணி வளர்ப்பதற்காகவும், நம் ஆண்டவர் தம் மக்களுக்காக வைத்திருக்கும் அன்புத் திட்டத்தை, அவரின் கனவை நனவாக்கவும் குடும்பம் குறித்த ஆயர் மாமன்றத்தில் செயல்பட நாம் அழைக்கப்பட்டுள்ளோம், ஏனெனில் மனித சமுதாயத்திற்கான இறைவனின் திட்டத்தில் குடும்பம் ஒருங்கிணைந்த அங்கம் என மேலும் கூறினார் திருத்தந்தை.
14 திருமணமான தம்பதியர் உட்பட கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் என உலகின் 253 பிரதிநிதிகள் வத்திக்கானில் இத்திங்களன்று இரு வார மாமன்றத்தைத் தொடங்கியுள்ளனர். இதில் ஆசியாவிலிருந்து 18 பேர் பங்கெடுக்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.