2014-10-06 16:43:43

திருத்தந்தை : ஒவ்வொரு குடும்பமும் விவிலியத்தை வைத்திருந்து அதைத் தினமும் வாசிக்க வேண்டும்


அக்.06,2014. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு விவிலியம் இருக்க வேண்டும், அதை அலமாரியில் வைக்காமல், கையில் வைத்து, அதைத் தினமும் தனியாகவோ அல்லது குடும்பமாகவோ அடிக்கடி வாசிக்க வேண்டும் என்று இஞ்ஞாயிறன்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத் தொடக்கத் திருப்பலியை நிறைவேற்றிய பின்னர், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
கணவனும் மனைவியுமாக, பெற்றோரும் பிள்ளைகளுமாக, மாலை நேரங்களில், சிறப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் விவிலியத்தை வாசிக்குமாறும், இவ்வாறு வாசிப்பதன்மூலம், இறைவார்த்தையின் ஒளியிலும் வல்லமையிலும் குடும்பம் வளரும் என்றும் கூறினார் திருத்தந்தை.
குடும்பம், நம்பிக்கையிலும் உறுதியிலும் முன்னோக்கிச் செல்வதற்கு, இறைவார்த்தையால் ஊட்டம்பெறுவதற்கு விவிலிய வாசிப்பு அவசியம் என்று, விவிலியத்தைத் தூக்கிக் காண்பித்தபடியே கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செபமாலை அன்னையிடம் குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்காகச் செபியுங்கள், அத்தாய், குடும்பங்களுக்கும், முழு உலகுக்கும் அமைதியை அருள்வாராக என்றும் விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அருளாளர் Giacomo Alberione அவர்களால் பவுலின் சபைகள் ஆரம்பிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டின் நினைவாக, இஞ்ஞாயிறன்று அச்சபையினர் வத்திக்கான் தூய பேதுரு வளாகம், இன்னும், இத்தாலியின் பிற வளாகங்களில் விவிலியப் பிரதிகளை விநியோகம் செய்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.