2014-10-06 16:43:15

கர்தினால் எர்டோ : திருஅவை, குடும்பங்களை நம்பிக்கையுடனும், கருணையுடனும் நோக்குகிறது


அக்.06,2014. குடும்பம் என்பது இக்காலத்துக்கு ஒத்துவராத ஓர் அமைப்புமுறை என்பது உண்மையல்ல, ஆனால் குடும்பங்களையே திருஅவை நம்பிக்கையுடனும், கருணையுடனும் நோக்குகிறது என்று, உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் இத்திங்கள் காலை அமர்வில் கூறினார் கர்தினால் பீட்டர் எர்டோ.
இத்திங்கள் காலையில் தொடங்கியுள்ள உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் திருத்தந்தையின் துவக்க உரைக்குப் பின்னர் உரையாற்றிய, இம்மாமன்றத்தின் பொது அறிக்கையாளரான புடாபெஸ்ட் கர்தினால் எர்டோ அவர்கள், கலந்துரையாடலுக்கு முன்னோடியாக இம்மாமன்றம் குறித்த விளக்கங்களை அறிவித்தார்.
குடும்பத்தில் நிலையான அர்ப்பணங்கள் இன்றியமையாதவை என்பதை மனதில் கொண்டு விவாதங்களைத் துவக்குவோம் எனக் கூறிய கர்தினால் எர்டோ அவர்கள், பாரம்பரியமாக நாம் பெற்றுள்ள விசுவாசத்தின் வழி நோக்கும்போது ஒரே பாலினத் திருமணங்கள் பெரும்பான்மை கத்தோலிக்கரால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகவே உள்ளது என்றும் கூறினார்.
மணமுறிவுகள், கருக்கலைப்புகள், வன்முறை, ஏழ்மை, பாலின அத்துமீறல் நடவடிக்கைகள் போன்றவைகள் உலகில் இடம்பெற்று வந்தாலும், குடும்பம் என்பது எப்பொழுதும் மனிதகுலத்தின் கல்விக்கூடாகவே இருந்துவருகிறது என மேலும் அவர் கூறினார்.
மணமுறிவுகள், திருமணங்கள், திருமணமின்றி சேர்ந்து வாழ்தல் போன்ற சூழல்களில் திருஅவை மேய்ப்பர்கள் சரியான வழிகளைக் காட்டும்வண்ணம் தெளிவான நெறிமுறைகள் வரையறுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் எர்டோ.
இம்மாமன்றத்தின் மூன்று தலைவர் பிரதிநிதிகளில் ஒருவரான பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்களும் இக்காலை அமர்வில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.