2014-10-04 16:49:57

மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் நிலைமை இன்னும் பாதுகாப்பற்று உள்ளது


அக்.04,2014. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் அமைதி ஒப்பந்தங்கள் ஏற்பட்டு, அந்நாட்டில் ஐ.நா. அமைதி காக்கும் படைகள் பணியில் நிறுத்தப்பட்டிருந்தாலும், அந்நாட்டின் பாதுகாப்புச் சூழல் இன்னும் பலவீனமாகவே உள்ளது என்று பிரான்ஸ் நாட்டு காரித்தாஸ் நிறுவனம் கூறியது.
ஆயுதம் ஏந்திய குழுக்கள், Brazzaville ஒப்பந்தத்தை இன்னும் மதித்து நடக்கவில்லை, அவர்களுக்குள் காணப்படும் உட்பிளவுகள் வன்முறையை மேலும் தூண்டிவிடுகின்றன என்று பிரான்ஸ் நாட்டு காரித்தாஸ் நிறுவனத் தலைவர் Aude Hadley கூறினார்.
மத்திய ஆப்ரிக்காவில், ஆப்ரிக்கக் கூட்டமைப்புச் செய்துவந்த பாதுகாப்புப் பணிகளுக்கு, கடந்த செப்டம்பர் 15ம் தேதி ஐ.நா. அமைதி காக்கும் படைகள் பொறுப்பேற்றன என்றுரைத்த Hadley, அனைத்துலக இராணுவ அமைப்பு, தலைநகர் பான்குய்யில் பாதுகாப்பு நிலைமையை அதிகரித்துள்ளது, ஆனால் நாட்டின் பிற இடங்களில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று கூறினார்.
கடந்த செப்டம்பர் இறுதியில், வெளிநாடுகளில் இருந்த மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் அகதிகள் எண்ணிக்கை 4,18,200 ஆக இருந்தது. இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 9 விழுக்காடாகும்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.