2014-10-04 16:50:18

உலகில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு யானை வேட்டை


அக்.04,2014. உலகில் யானைத் தந்தங்கள் மற்றும் காண்டாமிருகக் கொம்புகளுக்காகச் சட்டவிரோத வேட்டைகள் தொடரும்வேளை, இதற்கு எதிராக உலகெங்கிலும் வனஉயிர் ஆர்வலர்கள் கவனயீர்ப்புப் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
உலகில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும், சராசரியாக ஒரு யானை கொல்லப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளவேளை, விலங்குகள் வேட்டை இதேபோல் தொடர்ந்தால், இருபது ஆண்டுகளுக்குள் யானைகளும் காண்டாமிருகங்களும் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் வனவிலங்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த சட்டவிரோத வேட்டைகள் மூலம் கிடைக்கும் விலங்கின் பொருட்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிலையங்களை உடனடியாக மூடிவிட வேண்டும் என்றும் அந்த ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்து வருகின்றனர்.
இவற்றைத் தடுப்பதற்கான சட்டங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், கடுமையான தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
யானைத் தந்தங்களுக்காகவும் காண்டாமிருகக் கொம்புகளுக்காகவுமே அவை வேட்டையாடப்படுகின்றன.

ஆதாரம் : பிபிசி








All the contents on this site are copyrighted ©.