2014-10-03 15:48:16

திருத்தந்தை பிரான்சிஸ், இலங்கை அரசுத்தலைவர் சந்திப்பு


அக்.03,2014. இலங்கை அரசுத்தலைவர் மகிந்த இராஜபக்ஷே அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளி காலையில் வத்திக்கானில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் சந்தித்தார் இலங்கை அரசுத்தலைவர் இராஜபக்ஷே.
இலங்கையில் எடுக்கப்படும் தீர்வுகள், அந்நாட்டின் அனைத்துக் குடிமக்களின் நியாயமான ஏக்கங்களோடு ஒத்திணங்கிச் செல்வதாக இருக்கவேண்டுமெனவும், இன்னும், அந்நாட்டில் தற்போது காணப்படும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளங்கள் குறித்தும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாக திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் இலங்கைத் திருப்பயணம், திருத்தந்தை இலங்கை மக்களுடன் கொண்டிருக்கும் நெருக்கத்தின் அடையாளமாக வரவேற்கப்படும் என்ற நம்பிக்கையும், பொதுநலன், ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக்கு உழைப்பவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இத்திருப்பயணம் இருக்குமெனவும் கூறப்பட்டதாக அவ்வலுவலகம் மேலும் கூறியது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைத் திருப்பயணம், 2015ம் ஆண்டு சனவரி 13 முதல் 15 வரை இடம்பெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.