2014-10-02 16:25:50

மத்திய கிழக்குப் பகுதியில் துன்புறும் மக்கள்மீது திருத்தந்தை அக்கறை


அக்.02,2014. மத்திய கிழக்குப் பகுதியின் நெருக்கடி நிலைகளில் துன்புறும் மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, இவ்வியாழனன்று திருப்பீடச் செயலகத்தில் தொடங்கியுள்ள கூட்டத்திற்குச் சென்று அப்பிரதிநிதிகளை வாழ்த்தி தனது நன்றியைத் தெரிவித்தார் திருத்தந்தை.
“மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் இருப்பு” என்ற தலைப்பில் தொடங்கியுள்ள இக்கூட்டம், அப்பகுதியில் துன்புறும் மக்கள்மீது திருத்தந்தை கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகின்றது என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
இப்பகுதியின் பல பிரச்சனைகளுக்கு அடிப்படையாக ஆயுத வியாபாரங்களும், பயங்கரவாதச் செயல்களும் இருப்பது குறித்தும், பல இடங்களில் பயங்கரவாதக் கூறுகளுக்குத் துன்புறும் மக்கள் குறித்தும் திருத்தந்தை கவலையடைந்திருப்பதாக அருள்பணி லொம்பார்தி கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதியில் வன்முறைகளால் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கும் பிற சிறுபான்மை மதத்தவர்க்கும் திருஅவையால் என்ன செய்ய முடியும் என்பதை இக்கூட்டத்தினர் சிந்திக்கக் கூடியிருப்பதற்கு திருத்தந்தை நன்றி தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இக்கூட்டம் வருகிற சனிக்கிழமைவரை நடக்கும்.
இக்கூட்டத்தில், திருப்பீடத் தலைவர்கள், எகிப்து, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டன், ஈராக், ஈரான், லெபனன், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதர்கள், நியுயார்க், ஜெனீவா ஐ.நா. அலுவலகங்கள், ஐரோப்பிய சமுதாய அவை ஆகியவைகளுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.