2014-10-02 16:08:59

திருத்தந்தை : நற்செய்தி அறிவிப்புக்கும் மனிதகுல மேம்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு


அக்.02,2014. Ciad நாட்டின் தலத்திருஅவையானது கல்வி, நல ஆதரவு மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் ஆற்றிவரும் பணிகள் குறித்து தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக இவ்வியாழனன்று Ciad நாட்டு ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் ‘அட் லிமினா’ சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த Ciad ஆயர்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி அறிவிப்புக்கும் மனிதகுல மேம்பாட்டுப் பணிகளுக்கும் இடையே ஒரு நெருங்கியத் தொடர்பு உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
ஏழைகளுக்கும் பலவீனமானவர்களுக்கும் இடையே பணியாற்றுவது இயேசுவுக்கான உண்மையான சாட்சிய வாழ்வாகும் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இத்துறையில் பனியாற்றும் கத்தோலிக்கத் துறவு சபைகளுக்கும் பொதுநிலையினருக்கும் முழு ஊக்கம் வழங்கப்படவேண்டும் என்றார்.
கலாச்சாரத்தில் காணப்படும் நல்லவைகள் எப்போதும் மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குடும்பங்களின் உயர்விடம், குருத்துவப் பயிற்சியின் முக்கியத்துவம், மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் போன்றவை குறித்தும் Ciad ஆயர்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.