2014-10-01 16:15:56

புலம்பெயர்ந்துள்ள மக்களின் நெருக்கடிகள் தீர்க்கப்பட அமைதிக் கலாச்சாரம் அவசியம்


அக்.01,2014. பாதுகாப்பான மற்றும் தரமான வாழ்வுதேடி தங்கள் வீடுகளைக் கைவிட்டு, ஆபத்தான மற்றும் அடக்குமுறை நிலைகளில் எல்லைகளைக் கடக்கும் ஆப்ரிக்க மக்களுக்கு அனைத்துலக அளவில் உதவிகள் தேவைப்படுகின்றன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆப்ரிக்கப் புலம்பெயர்ந்தோர் குறித்து இடம்பெற்ற, ஐ.நா. புலம்பெயர்ந்தோர் நிறுவனத்தின் 65வது அமர்வில் இச்செவ்வாயன்று உரையாற்றிய பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், ஆப்ரிக்காவில் புலம்பெயர்ந்துள்ள மக்களின் நெருக்கடிகள் தீர்க்கப்பட, அமைதிக் கலாச்சாரம் அவசியம் என்று கூறினார்.
ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் புகலிடம் தேடும் ஆயிரக்கணக்கான மக்களின் பல கனவுகளும், வாழ்வும் எல்லைப் பகுதிகளில் நிலவும் கடும் கட்டுப்பாட்டு விதிமுறைகளால் ஆட்டம் காண்கின்றன என்றும் கூறினார் பேராயர் தொமாசி.
இப்படி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் இம்மக்களில் பலருக்கு மத்தியதரைக் கடல் தண்ணீர் கல்லறைகளாக அமைகின்றது என்றுரைத்த பேராயர் தொமாசி அவர்கள், இந்த மக்களின் துன்பங்களைத் துடைப்பதற்கு, பன்னாட்டுப் பாராமுகம் அகற்றப்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் ஆவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.