2014-10-01 15:46:45

அமைதி ஆர்வலர்கள் : 1953ல் நொபெல் அமைதி விருது(George C. Marshall)


அக்.01,2014. 1953ல் நொபெல் அமைதி விருது பெற்ற அமெரிக்கர் George Catlett Marshall அவர்கள், வரலாற்றில் மிகப்பெரிய இராணுவத்தை அமைத்து வழிநடத்தியவர் என்ற பெருமைக்குரியவர். இவர், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் மிகச் சிறந்த படை வீரராகவும், 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை இராணுவத்தின் தலைமை அதிகாரியாகவும் இருந்தவர். 1947ம் ஆண்டு முதல் 1949ம் ஆண்டு வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுச் செயலர், புகழ்பெற்ற Marshall திட்டம் என்ற வெளிநாடுகளின் பொருளாதார மற்றும் இராணுவத் திட்டத்தை உருவாக்கியவர், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் மூன்றாவது செயலர் என்றெல்லாம் புகழ் அடைந்தவர் இவர். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி பெறுவதற்கு இவரது தலைமைத்துவமே காரணம் என, பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களால் பாராட்டப்பட்டவர் George Catlett Marshall. இவர், அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் அவர்களுக்கு முக்கிய இராணுவ ஆலோசகராகவும் பணியாற்றியவர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பா பொருளாதாரத்தில் மீண்டும் உயிர்பெற்று வருவதற்கு George Catlett Marshall அவர்கள் இயற்றிய திட்டமே காரணமாக அமைந்தது. இதனால் இத்திட்டத்துக்கு இவரது பெயரே சூட்டப்பட்டு Marshall திட்டம் என்று அழைக்கப்பட்டது. இத்திட்டத்துக்காகவே இவருக்கு 1953ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பென்சில்வேனியா மாநிலத்தில் யூனியன்டவுனில் நடுத்தரக் குடும்பத்தில் 1880ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பிறந்தார் George Catlett Marshall. இவரது தந்தையின் பெயரும் இதே பெயராக இருப்பதால், இவர், George Catlett Marshall ஜூனியர் என அழைக்கப்படுகிறார். இவரது தந்தை பென்சில்வேனியாவில், நிலக்கரி வணிகத்தைச் சிறப்பாகச் செய்து வந்தார். ஆனால் இவர், சிறுவனாக இருந்தபோதே படை வீரராக ஆகவேண்டுமென்று ஆசைப்பட்டதால், விர்ஜீனியா இராணுவப் பள்ளியில் பெயரைப் பதிவு செய்தார். மாணவர் படைப்பிரிவின் முதல் மூத்த தலைவராக, 1901ம் ஆண்டில், பட்டம் பெற்றார். பிலிப்பீன்சிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் பணிசெய்த பின்னர், 1907ல் Fort Leavenworth ல் Cavalry காலால்படை பள்ளியிலும், 1908ல் Army Staff கல்லூரியிலும் சிறந்த மாணவராகப் பட்டம் பெற்றார். அடுத்த ஒன்பது ஆண்டுகள் இளம் இராணுவ அதிகாரியாக, பல்வேறு பொறுப்புக்களை ஏற்று, அவற்றைத் திறமையாகச் செய்தார். இதனால் முதல் உலகப் போரில் இராணுவப் பிரிவில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, முதல் இராணுவப் பிரிவை பிரான்சுக்கு வழிநடத்திச் சென்றார். Cantigny, Aisne-Marne, St. Mihiel, Meuse-Argonne ஆகிய இடங்களில் நடந்த போர்களில் இவர் தலைமை வகித்து ஆற்றிய பணிக்காக, இவருக்குப் புகழும் பதவி உயர்வும் கிடைத்தன.
1919ம் ஆண்டு முதல் 1924ம் ஆண்டு வரை இராணுவ அதிபர் Pershingக்கு உதவியாளராகப் பணியாற்றிய மார்ஷல், 1924ம் ஆண்டு முதல் 1927ம் ஆண்டு வரை சீனாவிலும் பணிசெய்தார். 1927ல் இராணுவப் போர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர், 1927ம் ஆண்டு முதல் 1932ம் ஆண்டு வரை காலாட்படைப் பள்ளியில் உதவி படைத்தளபதியாகவும், 1933ல் அப்பள்ளியின் 8வது படைப் பிரிவின் தளபதியாகவும், பின்னர், 1936 முதல் 1938 வரை 5வது படைப் பிரிவின் தலைவராகவும் இருந்தார் மார்ஷல். 1939, செப்டம்பரில், வாஷிங்டனில் அரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அவர்களால் இராணுவ அலுவலகர்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1944ல் இராணுவத் தளபதியாக மாறினார் இவர். அந்த ஆண்டில்தான் அமெரிக்க காங்கிரஸ் அவை, இராணுவத் தளபதிக்கு, five-star ஐந்து நட்சத்திரப் பதவியை உருவாக்கியது. 1941ல் Pearl துறைமுகம் ஜப்பானியர்களால் தாக்கப்படுவதற்கு முன்னர், மார்ஷல், ஒரு தலைமை இராணுவத் தளபதியாக, இராணுவத்தைத் தயார் நிலையில் வைத்திருந்தார். எண்பது இலட்சத்துக்கு மேற்பட்ட படைவீரர்களை நிறுத்தினார். அமெரிக்க மற்றும் பிரித்தானிய அறிவியலாளர்கள் அணுகுண்டுகள், அணு ஆயுதங்கள் பற்றி நடத்திய ஆய்வை மேற்பார்வையிடும் கொள்கைக் குழுவில் 1941ம் ஆண்டிலிருந்து இவர் உறுப்பினராக இருந்தார். ஆயினும், 2ம் உலகப் போர் முடிந்த பின்னர் 1945, நவம்பரில் இக்குழுவிலிருந்து விலகிக்கொண்டார் மார்ஷல்.
ஆயினும், Marshall அவர்களால் பொதுநலப் பணியிலிருந்து விலக முடியவில்லை. இராணுவப் பணிகள் முடிந்த கையோடு தூதரகப் பணிகளில் தலைமை அதிகாரியாக ஈடுபட்டார். அட்லாண்டிக் அறிக்கை(1941-1942), Casablanca (1943), Quebec (1943), Cairo-Teheran (1943), Yalta (1945), Potsdam (1945) ஆகிய இடங்களிலும், இன்னும் பல இடங்களிலும் நடந்த மாநாடுகளில் கலந்து கொண்டார். உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சீனாவுக்கு, 1945 மற்றும் 1946ம் ஆண்டுகளில் அரசுத்தலைவர் Truman அவர்களின் பிரதிநிதியாகச் சென்றார். 1947ல் அரசுச் செயலர் பதவியை ஏற்று ஈராண்டுகள் பணியாற்றினார். 1947ல் Harvard பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் பொருளாதாரத் திட்டம் குறித்து விளக்கினார். இதுவே வரலாற்றில் Marshall Plan என்று புகழடைந்தது. 1953ல் நொபெல் அமைதி விருது பெற்ற George Marshall ஜூனியர் அவர்கள் 1959ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி காலமானார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.