2014-10-01 16:17:11

அக்டோபர் 02, உலக வன்முறையற்ற நாள்


அக்.01,2414. இனவாத வன்முறையும், கலாச்சார நினைவிடங்களும், கலாச்சாரப் பாரம்பரிய வளங்களும் கட்டுப்பாடற்று அழிக்கப்படுதலும் அதிகரித்துவரும் இக்காலத்தில், அமைதி மற்றும் ஒப்புரவுக்கு அழைப்புவிடுத்த மகாத்மா காந்தி அவர்களின் அறைகூவலை மீண்டும் நினைவுகூருவோம் எனக் கூறியுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.
அக்.02, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படும், உலக வன்முறையற்ற நாளுக்கென பான் கி மூன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இராணுவப் பகையுணர்வுச் செயல்கள் மூலமாக இல்லாமல், அமைதியான போராட்டங்கள் மூலம் அதிகமாகச் சாதிக்க முடியும் என்பதை தனது வாழ்வால் உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் மெய்யியலை இந்த உலக நாளில் நினைவுகூருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மனித சமுதாயத்தின் வளமையான பன்மைத்தன்மையை மதித்துக் கொண்டாடி நல்லிணக்கத்தில் ஒன்றிணைந்து வாழ்வதற்காக, உரையாடல் மற்றும் புரிந்துகொள்ளுதலின் அடிப்படையில் அமைதிக் கலாச்சாரத்தை நாம் ஊக்குவிக்க வேண்டுமென்றும் அச்செய்தி கூறுகிறது.
மனித மாண்பைப் போற்றி, வன்முறையற்ற கலாச்சாரத்தை ஊக்குவித்து, நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு கல்வியைத் தவிர சிறந்த கருவி வேறு எதுவும் இல்லையெனவும் கூறியுள்ளார் பான் கி மூன்.
மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த அக்.02ம் நாளை, உலக வன்முறையற்ற தினமாக அறிவித்துச் சிறப்பித்து வருகிறது ஐ.நா.நிறுவனம்.
மகாத்மா காந்தி அவர்கள் இறந்த 1948ம் ஆண்டில் அனைத்துலக மனித உரிமைகள் அறிக்கை அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.