2014-09-30 16:00:08

மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்கு நாடுகளுக்கு அழைப்பு


செப்.30,2014. மத்திய கிழக்கிலும், உக்ரேய்னிலும் மோதல்களால் நசுக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்றுவதற்கு, ஐக்கிய நாடுகள் நிறுவனம் தனது முயற்சிகளை மேலும் உயிரூட்டம் பெறச்செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.
ஐ.நா. பொது அவையின் 69வது அமர்வில் இத்திங்களன்று உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஐ.நாவின் உறுப்பு நாடுகள் தங்கள் சொந்த விருப்பங்களைப் புறந்தள்ளி, அனைத்துலக சட்டத்தின் வழியாக, மோதல்களால் நசுக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அச்சுறுத்தலில் வாழ்கின்ற சிரியா மற்றும் ஈராக்கின் கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனங்களின் இரத்தம், அனைத்துலக சமுதாயத்துக்கு இருக்கும் பொறுப்புணர்வைச் சுட்டிக்காட்டுகின்றது என்றுரைத்தார் கர்தினால் பரோலின்.
உலகில் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், ஐ.நா. நிறுவனம் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், பலதரப்பு இராணுவ நடவடிக்கைகள் மூலம் இடம்பெறும் சண்டைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்றும் உலக சமுதாயம் எதிர்பார்க்கின்றது என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.