2014-09-30 16:00:45

மியான்மாரில் சிறார் வியாபாரம் நிறுத்தப்பட வேண்டும், யாங்கூன் பேராயர்


செப்.30,2014. மியான்மாரில் அப்பாவிச் சிறாரும், இளையோரும் வியாபாரப் பொருள்களாக விற்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென, யாங்கூன் பேராயர் Charles Bo வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மலேசியத் தோட்டங்களில் சரியான ஆவணங்களின்றியும், தாய்லாந்து வீடுகளில் குறைந்த ஊதியத்துக்கும் வேலை செய்வதற்கு இளையோர் எடுத்துச்செல்லப்படுகின்றனர் என உரைத்த பேராயர் போ அவர்கள், தாய்லாந்திலும் சீனாவிலும் பாலியல் சந்தைகளில் பொருள்களாவும், அண்டை நாடுகளில் செல்வந்தர்களுக்குத் தற்காலிக மனைவிகளாக வாழவும் இளையோர் பயன்படுத்தப்படுகின்றனர் எனக் கூறியுள்ளார்.
உலகில் ஏறத்தாழ ஒவ்வொரு நாட்டினராலும் மியான்மார் மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர், ஏறத்தாழ அறுபது வருட சர்வாதிகார ஆட்சியில் பெருமளவான மக்களும், கடந்த இருபது ஆண்டுகளில் முப்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களும் கட்டாயமாகவும், பாதுகாப்பற்ற நிலையிலும் மியான்மாரைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று யாங்கூன் பேராயரின் அறிக்கை கூறுகிறது.
உலகில் ஒவ்வோர் ஆண்டும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வியாபாரம் செய்யப்படுகின்றனர், ஏறக்குறைய நான்கு இலட்சம் பெண்கள் பாலியல் அடிமைகளாக உள்ளனர் என்பதையும் குறிப்பிட்டுள்ள பேராயர், மனித வியாபாரம் உலகில் நிறுத்தப்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : Zenit







All the contents on this site are copyrighted ©.