2014-09-30 15:56:12

திருத்தந்தை : வாழ்வின் இருளான நேரங்களில் நம் புலம்பல் செபமாக மாறுகின்றது


செப்.30,2014. வாழ்வின் இருளான நேரங்களில் நம் புலம்பல் செபமாக மாறுகின்றது, ஆயினும், நம் புகார்கள் மிகைப்படுத்தப்பட்டதாய் இல்லாமல் இருப்பதில் கவனமாய் இருக்குமாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, யோபு, தான் பிறந்ததை நினைத்துப் பழிப்பது பற்றிக் கூறும் இந்நாளைய முதல் வாசகம் பற்றிக் குறிப்பிட்டு வழங்கிய சிந்தனைகளில் இவ்வாறு கூறினார்.
வாழ்வின் இருளான நேரங்களில் நாம் புலம்பும்போது, கடும் துன்பங்களை அனுபவிக்கும் மக்களை நினைவுகூர வேண்டுமென்றும், விசுவாசத்துக்காக தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்ட கிறிஸ்தவர்கள்போன்று, கடும் துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் புலம்புவதற்குச் நல்ல காரணங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
யோபுவின் புலம்பல், பழிப்புரை போல முதலில் நமக்குத் தோன்றலாம், ஆனால் யோபு, தனது முழுக் குடும்பம், தனது சொத்துக்கள், தனது நலவாழ்வு என அனைத்தையும் இழந்து எவ்வாறு அவர் சோதிக்கப்பட்டார் என்பதை எடுத்துச்சொன்னார் திருத்தந்தை.
ஆயினும் யோபு செபிக்கிறார், ஏனெனில் கடவுள் முன்னிலையில் உண்மையாய் இருப்பதே செபம், இவ்வாறு மட்டுமே யோபுவால் செபிக்க முடியும் என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை, நாமும் உண்மை நிலையோடு செபிக்க வேண்டும், உண்மையான செபம், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலிலிருந்து, நம் இதயத்திலிருந்து வருவதாய் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
முதியோரை, மருத்துவமனைகளில் தனிமையாய் இருக்கும் நோயாளிகளை நினைத்துப் பார்ப்போம், இவர்களுக்காகவும், இருளான நேரங்களில் வாழும் மக்களுக்காகவும் திருஅவை செபிக்கின்றது என்றும் மறையுரையில் கூறிய திருத்தந்தை, திருஅவை இவர்களின் துயரங்களைத் தன்மீது சுமந்து செபிக்கின்றது என்று தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.