2014-09-30 16:00:32

கர்தினால் டாங் : ஹாங்காக்கில் அமைதி காக்க வேண்டுகோள்


செப்.30,2014. ஹாங்காக் நகரத் தலைவர் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஹாங்காக் தெருக்களில் சனநாயக ஆதரவு போராட்டங்களை நடத்திவரும்வேளை, அமைதி காக்குமாறு இச்செவ்வாயன்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஹாங்காக் ஆயர் கர்தினால் ஜான் டாங்.
ஹாங்காக்கில் பதட்டநிலைகள் அதிகரித்துவருவதையொட்டி அமைதி காக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் டாங் அவர்கள், ஹாங்காக் அரசு தனது குடிமக்களின் பாதுகாப்பை முக்கியமாக கருதி, காவல்துறையை முடுக்கி விடுவதற்குப் பதிலாக, இளைய தலைமுறையினரின் குரல்களுக்குச் செவிகொடுக்குமாறு கேட்டுள்ளார்.
தங்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் எல்லாரும் அமைதி காக்குமாறும், மனம் இருந்தால் வழியும் உண்டு என்றும் கர்தினால் கூறியுள்ளார்.
ஹாங்காக்கில் 2017ல் நடக்கும் தலைமைத்துவத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களைத் தணிக்கை செய்வதற்கு கடந்த மாதத்தில் பெய்ஜிங் ஆணைபிறப்பித்ததைத் தொடர்ந்து, தற்போதைய ஹாங்காக் தலைவர் Leung Chun-ying அவர்கள் பதவி விலகுமாறு போராட்டதாரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஹாங்காக்கில் தற்போது நடந்துவரும் சனநாயக ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள்.
இதற்கிடையே, சீனப் படைகளின் உதவியின்றி ஹாங்காக் காவல்துறையினர் இப்போராட்டங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என Leung கூறிவருகிறார் என செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.