2014-09-29 14:56:21

வாரம் ஓர் அலசல் – முதியோரைப் புறக்கணிக்கும் மக்களுக்கு எதிர்காலம் இல்லை


செப்.29,2014 RealAudioMP3 . துபாயில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக வேலை செய்துவந்த ஓர் இலங்கைத் தாய், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இலங்கை திரும்பினார். அறுபது வயதான இத்தாய் வேலை செய்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி வாழ்ந்த மற்றோர் இலங்கை அன்பர், இத்தாயின் தற்போதைய நிலை குறித்து, சித்தார்கோட்டை இணைய பக்கத்தில் அண்மையில் ஒரு தகவலைப் பதிவு செய்துள்ளார்.
இந்த அம்மாவை கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக எனக்குத் தெரியும். இவர், இளவயதிலேயே துபாய் வந்த காரணத்தினால்தான் என்னவோ, இவர் எல்லாரிடமும் அதிக அன்பும் அக்கறையும் காட்டினார். இவர் வேலைசெய்த அந்த முஸ்லிம் வீட்டில் மொத்த நிர்வாகத்தையுமே இவர்தான் பார்த்து வந்தார். அந்த அளவுக்கு இவர் மிகவும் நேர்மையாய், கிட்டத்தட்ட அந்தக் குடும்பத்தில் ஓர் உறுப்பினர் போலவே இருந்தார். இந்த அம்மாவுக்கு இலங்கையில் இரு மகள்கள், ஆறு பேரன் பேத்திகள். கடந்த முப்பது ஆண்டு வருமானம் அனைத்தையும் தனது இரு மகள்களுக்காகவே இவர் செலவு செய்தார். தனக்கென ஐந்து பைசாகூட சேமித்து வைக்கவில்லை. சரி, அறுபது வயதாகிறது, இத்தனை ஆண்டுகள் வேலை பார்த்தது போதும், இனிமேல் நம் மகள்களுடன் இருக்கலாம் என்று துபாயில் சொல்லிவிட்டு, மிகுந்த நம்பிக்கையோடு இலங்கை திரும்பினார். இவர்கள் வேலை செய்த அந்த முஸ்லிம் குடும்பத்துக்கு இவர்களை விடவே மனது இல்லை. எனினும், கடைசி காலத்தை, பேரன் பேத்திகளோடு செலவழிக்கப் போகிறேன் என்று சொல்லி, அந்தக் குடும்பத்தையும் ஒருவழியாகச் சமாதானப்படுத்தி நாடு திரும்பினார். ஆனால் அங்கே அவர்களின் இருமகள்களுக்கிடையே சண்டை. அம்மா உனக்குத்தான் எல்லாம் செய்தார்கள், அதனால் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என, இருமகள்களும் மாறி மாறிச் சண்டை போட்டு, கடைசியில் தாயைத் தனியாக விட்டுவிட்டனர்.
இந்நிலையை இன்று பல குடும்பங்களில் காண முடிகின்றது. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட. அதன்மூலம் இறைவன் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்(வி.ப.20,12) என்று வேதம் சொல்கிறது. ஆனால் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை, அவர்களின் முதுமையில் முதியோர் இல்லங்களில் தள்ளிவிடும் இளையோரின் எண்ணிக்கை இக்காலத்தில் அதிகரித்து வருகிறது. பெற்றோருடைய குருதிப்புனலில், வழிந்தோடிய வியர்வையில், கடுமையான உழைப்பில் படித்துமுடித்து வேலை தேடி வெளிநாடு சென்று பணத்தில் மிதக்கும் பாசம் மறந்த சில பிள்ளைகளின் புறக்கணிப்பால், அழுத கண்ணீருடன் அநாதைகளாய், முதியோர் இல்லங்களைத் தேடி அலைகின்றனர் வயதான பெற்றோர். விருந்தோம்பலை வீட்டின் தலைசிறந்த கடமையாகக் கருதிய கலாச்சாரங்களில் இன்று வயதான பெற்றோரைப் பேணுவதே அவசியமற்ற ஒன்றாகிவிட்டது. இச்சனிக்கிழமையன்று ஊடகம் ஒன்றில் ஒரு செய்தி இருந்தது.
பெல்ஜியம் நாட்டில் தம்பதியினர் ஒருவர் தங்களைக் கருணைக்கொலை செய்யுமாறு தங்கள் பிள்ளைகளிடமே கோரிக்கை விடுத்துள்ளனர். Brusselsல், பிரான்சிஸ்-ஆனி என்ற தம்பதியினர் தங்களது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரான்ஸிஸ், கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவருக்கு கண் பார்வை மங்கியதுடன், செவித்திறனும் குறைந்து வருவதால் எந்நேரமும் அவர் இறக்கலாம் என்ற பீதி தம்பதியினருக்கிடையே எழுந்துள்ளது. எனவே தங்களைக் கருணை கொலை செய்யுமாறு பிரான்ஸிசும், ஆனியும் பிள்ளைகளிடம் தெரிவித்ததையடுத்து, பிள்ளைகளும் உரிய மருத்துவர்களைத் தேடி வருகிறார்கள். பெல்ஜியத்தில் கடந்த 2002ம் ஆண்டு கருணைக் கொலை செய்வது சட்டத்தால் அனுமதிக்கப்பட்டும் இருக்கிறது.
இன்றைய உலகில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பொதுவாக அறுபது வயதைக் கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர். இந்த மூத்த குடிமக்களை மதிக்கவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தவும், அவர்கள் நலனைப் பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை மதிக்கவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவுகூரவும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கவுமென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, அக்டோபர் முதல் தேதியை, அனைத்துலக முதியோர் நாளாக அறிவித்தது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் இவ்வுலக நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. “எவரையும் ஒதுக்கக் கூடாது:எல்லாருக்குமான சமூகத்தை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில், வருகிற புதனன்று 24வது அனைத்துலக முதியோர் நாள் சிறப்பிக்கப்படவுள்ளது.
நாம் வாழ்க்கையில் எவரையும் ஒதுக்கக் கூடாது என்று இந்த உலக நாள் நமக்கு அழுத்தமாகச் சொல்கின்றது. "நீண்ட ஆயுள், ஆசீர்வாதம்" என்ற தலைப்பில், திருப்பீட குடும்ப அவை இஞ்ஞாயிறன்று அனைத்துலக கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வயதான அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் உட்பட பல நாடுகளின் ஏறக்குறைய நாற்பதாயிரம் மூத்த குடிமக்கள் கலந்துகொண்டனர். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடந்த இக்கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த முதியோர் பிரதிநிதிகளின் அனுபவங்களைக் கேட்டதுடன், தனது எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டு திருப்பலியும் நிறைவேற்றினார். ஈராக்கின் மனிதமற்ற வன்முறைக்குக்குத் தப்பிவந்த வயதான முபாரக்-அனீசா தம்பதியரும் இந்நிகழ்வில் பங்குபெற்று தங்களின் அனுபவங்களைப் பகிர்நதுகொண்டன RealAudioMP3 ர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து சில சிந்தனைகள் இதோ... RealAudioMP3
வயதான மனிதர், வாழ்வின் ஞானமாக இருக்கிறார். தலைமுறைகளுக்குள் சந்திப்பு இடம்பெறாமல், மக்களுக்கு எதிர்காலம் இல்லை. இக்காலத்தில் சில நேரங்களில் இளைய தலைமுறைகள், சிக்கலான வரலாற்று மற்றும் கலாச்சாரக் காரணங்களால் தங்களின் பெற்றோர் இல்லாமல் தனித்து வாழலாம் என்று ஆழமாக உணர்கின்றனர். ஆனால், தலைமுறைகளுக்குள் சந்திப்பு இல்லையென்றால், அது மீண்டும் உருவாக்கப்படவில்லையெனில், அதன் இழப்பு பரிதாபமானதாக இருக்கும், அதனால் கிடைக்கும் சுதந்திரம் போலியானதாகும். முதியோர்களுக்கு, தங்களைக் கவனிக்கும் குடும்பங்கள் எப்போதும் கிடைப்பதில்லை. முதியோர் இல்லங்கள் சிறைகளாக இல்லாமல், உண்மையான இல்லங்களாக இருக்கும்வரை அவை பாராட்டப்பட வேண்டியவை. அந்த இல்லங்கள் முதியோருக்காக இருக்க வேண்டும், யாரோ சிலரின் ஆதாயத்துக்காக இயங்கக் கூடாது. முதியோர் இல்லங்கள் மனித சமுதாயத்தின் நுரையீரல்கள். அங்குப் பணிசெய்வோரை நன்றியுடன் நினைக்கின்றேன். அங்குச் சென்று வயதானவர்களைச் சந்திப்பவர்களைப் பாராட்டுகிறேன். முதியோர், கைவிடப்பட்டவர்களாக, மறக்கப்பட்டவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக இருக்கக் கூடாது. இப்படி புறக்கணிப்பது உண்மையான கருணைக் கொலையாகும். வேலையில்லாததால் இளையோர் ஒதுக்கப்படுகிறார்கள். ஆனால் முதியோர், பணத்தைக் கடவுளாக வைக்கும் ஒரு பொருளாதார அமைப்பால் புறக்கணிக்கப்படுகின்றனர். வயதானவர்களைத் தவறாக நடத்துவது மனிதப்பண்பற்ற செயலாகும். நாம் அனைவரும், புறக்கணிக்கும் நச்சுகலந்த கலாச்சாரத்துக்கு எதிராகச் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம்...
இவ்வாறெல்லாம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறினார். 2030ம் ஆண்டுக்குள் RealAudioMP3 உலகில் அறுபது வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 140 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. "நாம் விரும்பும் வருங்காலத்தை அமைப்பது நமது குறிக்கோளாக இருந்தால்", 2030ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் இருபது விழுக்காட்டினராக இருக்கவுள்ள வயதானவர்கள்மீது நாம் அக்கறை காட்ட வேண்டுமென ஐ.நா. கூறுகிறது. அன்பர்களே, நம் ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத பருவங்களில் ஒன்றாக இருப்பது முதுமை. இந்தப் பருவம் மிகவும் கொடுமையானது. இயலாமையைவிடப் பெரிய நரகம் வேறெதுவுமில்லை. வயதானவர்கள் உறவுகளிடமிருந்து அன்பெனும் வரத்தை எதிர்நோக்கித் தவமிருக்கிறார்கள். இவர்களால் புறக்கணிப்பைத் தாங்கிக்கொள்ள இயலாது. எனவே வாழ்வின் தொடக்க நிலையிலுள்ள குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வாழ்வின் அந்திப்பொழுதிலுள்ள முதியோருக்கும் நமது அன்பும் அக்கறையும் ஆதரவும் தேவைப்படுகின்றன.
ஒருநாள் இரவில், தசரதர், சரயூ நதிக் கரையோரம் தேரேறி இரவில் வேட்டைக்குச் சென்றபோது, யானை நீர் அருந்தும் ஓசையென மயங்கி, அவர் விடுத்த அம்பு, ஓர் இளைஞனின் மார்பில் தைத்தது. அந்த இளைஞன், தனது பார்வையிழந்த பெற்றோரின் தாகத்தைத் தீர்ப்பதற்காக குடுவையில் நீர் முகந்துகொண்டிருந்தான். இரத்தவெள்ளத்தில் இவன் அலறியதைக் கேட்ட தசரதர் அவ்விடத்துக்கு ஓடோடி வந்தார். ஆனால் அந்த இளைஞனோ, நான் இறப்பதற்காக வருந்தவில்லை, ஆனால், பார்வையிழந்த என் பெற்றோரின் தாகம் தீர்க்க நீர் எடுக்க வந்த எனது உயிரைக் குடித்துவிட்டாயே, என் பெற்றோர் தாகத்தால் உயிர்விட நேருமே எனத் துடிக்கிறேன், விரைந்து சென்று நடந்ததைக் கூறி, தண்ணீர்க் கொடுத்து அவர்களின் தாகத்தைத் தணி, அதுவே நீ எனக்குச் செய்ய வேண்டிய உதவி என்று சொல்லி இளைஞன் உயிர்விட்டான். இந்த இதிகாச இளைஞனின் பெற்றோர் பாசம் நம்மிலும் வளரட்டும்.
ஏன் இந்தக் காலத்தில்கூட இதிகாச காலத்துப் பிள்ளைகள் உள்ளனர். அந்த இந்தியப் பெற்றோருக்கு இரு மகன்கள். அக்கம்பக்கத்தார் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு நல்ல மகன்களாக அவர்கள் வளர்ந்தனர். ஆனால் மூத்த மகன் ஒரு கட்டத்தில், வேறு மதம் சார்ந்த ஒரு பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இதனைத் தாயால் ஏற்க முடியவில்லை. தந்தை எப்படியோ சகித்துக் கொண்டார். பின்னர் சில காலம் கழித்து இளைய மகனும் மூத்த மகன்போல் திருமணம் செய்துகொண்டார். இப்போது குடும்பத்தில் தகராறு. தாய் குடும்பத்தைவிட்டே வெளியேறிவிட்டார். தந்தை தனித்துவிடப்பட்டார். பின்னர் அவருக்கு இரு சிறுநீரகங்களும் பழுதடைந்தன. மூத்த மகன் வெளிநாட்டிலிருந்து பணத்தோடு வந்து சேர்ந்தார். அதற்குள் இளையமகன் தனது சிறுநீரகங்களில் ஒன்றை தந்தைக்குக் கொடுத்திருந்தார். இளையமகனிடம், நீ வாழவேண்டியவன், ஏன் கொடுத்தாய் என மற்றவர் கேட்டபோது, எப்படியிருந்தாலும் அவர் என் அப்பா என்று பதில் சொன்னார் இளைய மகன்.
அன்பு நேயர்களே, வயதான பெற்றோரை அன்புடன் பராமரிப்போம். முதியோரைப் புறக்கணிக்கும் மக்களுக்கு எதிர்காலம் இல்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.