2014-09-29 15:51:10

திருத்தந்தை பிரான்சிஸ், மால்ட்டா அரசுத்தலைவர் சந்திப்பு


செப்.29,2014. மால்ட்டா அரசுத்தலைவர் Marie-Louise Coleiro Preca அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்கள் காலையில் வத்திக்கானில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்தார் மால்ட்டா அரசுத்தலைவர் Coleiro Preca.
திருப்பீடத்துக்கும், மால்ட்டாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், கல்விக்கும், நலவாழ்வுக்கும், குறிப்பாக ஏழைகளுக்கு ஆதரவாக மால்ட்டா திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மேலும், மால்ட்டா சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் கிறிஸ்தவ விழுமியங்கள் வலியுறுத்தப்படுவதன் அவசியம், குடும்ப அமைப்பை உறுதிப்படுத்துதல் உட்பட இருதரப்பினரும் ஆர்வம் கொண்டுள்ள பொதுவான விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாக, அவ்வலுவலகம் கூறியது.
ஐரோப்பிய சமுதாய அவையில் மால்ட்டாவின் பங்கு, மத்திய கிழக்குப் பகுதியில் இடம்பெறும் மோதல்களுக்கு உரையாடல் மூலம் தீர்வு காண்பது, ஐரோப்பா எதிர்கொள்ளும் குடியேற்றதாரர் விவகாரம் ஆகியவைகளும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று அப்பத்திரிகை அலுவலகம் மேலும் அறிவித்தது.
மால்ட்டா, தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடாகும். இந்நாட்டில் மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன. சிசிலிக்குத் தெற்காகவும், துனீசியாவுக்கு கிழக்கேயும், லிபியாவுக்கு வடக்கேயும் இந்நாடு அமைந்துள்ளது. இங்கு பெரும்பான்மையினோர் கத்தோலிக்கர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.