2014-09-26 16:04:00

நற்செய்தி அறிவிப்பின் புதிய பாதையைப் பின்பற்ற Focolari இயக்கத்துக்கு திருத்தந்தை அழைப்பு


செப்.26,2014. நற்செய்தி அறிவிப்பின் புதிய பாதையைப் பின்பற்றி, உலகினர் அனைவருக்கும், குறிப்பாக, ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டோருக்குக் கடவுளின் அன்புக்குச் சாட்சிகளாகத் திகழ்வதற்கு Focolari இயக்கம் அழைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
காஸ்தெல்கந்தோல்ஃபோவில் இம்மாதம் 1 முதல் 28 வரை பொது அவையை நடத்திவரும் Focolari பக்த இயக்கத்தின் 500 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
திருஅவையில் ஒரு சிறு விதையாகப் பிறந்த இந்த இயக்கம், தற்போது மரமாக வளர்ந்து, எல்லா வகையான கிறிஸ்தவக் குடும்பங்கள் மற்றும் பல்வேறு மதங்கள் வழியாக கிளைகளாகப் பரவியுள்ளது என்றும் பாராட்டினார் திருத்தந்தை.
‘மரியாளின் வேலை’ என்று அறியப்படும் இந்த Focolari இயக்கம், தூய ஆவியாரிடமிருந்து பொழியப்பட்ட ஒன்றிப்பு என்ற சிறப்புத் தனிவரத்தால் இயங்கி வருகிறது, இந்த இயக்கத்தை ஆரம்பித்த Chiara Lubich இந்த அசாதாரணக் கொடைக்குச் சான்றாக உள்ளார் என்றும் புகழ்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திலிருந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டளவாக Focolari உறுப்பினர்கள், அகிலத் திருஅவையுடன் இணைந்து இறையன்புக்குச் சாட்சிகளாக இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
இன்றைய நற்செய்திப் பணிக்குத் தேவைப்படும் தியானம், உரையாடல், தன்னையே வழங்குதல் ஆகியவற்றில் வளருமாறும் ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை.
மேலும், WEF என்ற உலக பொருளாதார கழகத்தை நிறுவியவரும் அதன் செயல்திட்ட தலைவருமான பேராசிரியர் Klaus Schwab, OIF என்ற ப்ரெஞ்ச் மொழிபேசும் அனைத்துலக அமைப்பின் பொதுச்செயலர் Abdou Diouf , அர்ஜென்டீனா தேசிய சமூகப் பாதுகாப்பு நிர்வாக இயக்குனர் Diego Bossio, ஜப்பான் திருப்பீடத் தூதர் பேராயர் Joseph Chennoth ஆகியோரையும் இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.